Skip to main content

பிஸியோதெரபிஸ்ட்கள் டாக்டர்கள் இல்லையா? - இயன்முறை மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

Published on 20/04/2018 | Edited on 20/04/2018

பிஸியோதெரபிஸ்ட்கள் எனப்படும் இயன்முறை மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னாள் டாக்டர் என்று போட்டுக்கொள்ளக்கூடாது என்று இந்திய மருத்துவக்கவுன்சில் தொடர்ந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

2008ஆம் ஆண்டு வெளியான ஓர் அரசாணையை அடிப்படையாய்க் கொண்டு மருத்துவர்களின் கவுன்சில் தொடர்ந்த வழக்கின், இந்தத் தீர்ப்பு சில அதிர்வலைகளை ஏற்படுத்தி அலோபதி மருத்துவர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு நடுவே பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமைந்தது. 

 

Pro

 

இந்நிலையில்,  இயன்முறை மருத்துவர் பெருமன்றம் சார்பில், ஈரோட்டில் 18.04.2018 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 800க்கும் அதிகமான இயன்முறை மருத்துவர்கள் மற்றும் இயன்முறை மருத்துவ மாணவர்கள்  தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்து பங்கேற்றனர். உணர்வுப்பூர்வமாக நடந்த இந்தப் போராட்டத்தை இயன்முறை மருத்துவப் பெருமன்றத்தின் தலைவர் வே.கிருஷ்ணகுமார், செயலாளர் சு.சுரேஷ், பொருளாளர் ரா.ராஜேஷ் மற்றும் ஈரோடு மாவட்ட பெருமன்ற பொறுப்பாளர் ஆனந்த் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். 

 

இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது, மற்ற மருத்துவத்துறையினரின் தலையீடு இல்லாமல் பிசியோதெரபி சம்பந்தப்பட்ட கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். 
தமிழக சுகாதார துறையால் கொண்டுவர இருக்கின்ற மருத்துவமனை ஒழுங்கு முறை சட்டத்தில் பிசியோதெரபி கிளினிக்குகளை ஒழுங்குபடுத்த உருவாக்க உள்ள சட்டதிட்டங்களை வரையறுக்க, பிசியோதெரபி மருத்துவர்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும். 

 

பிசியோதெரபி துறையை தனித்துறையாக அங்கீகரிக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு இலவச பிசியோதெரபி சேவை கிடைக்க ஆரம்ப சுகாதார நிலையம் முதல் புதிய பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களையும் உருவாக்க வேண்டும். மேற்சொன்ன கோரிக்கைகளை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிசியோதெரபி படிப்பின் முக்கியத்துவம் கருதி தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

சார்ந்த செய்திகள்