அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள், ரயில் எரிப்பு சம்பவங்கள், வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் அக்னிபாத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமையன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் திருச்சி ரயில் ஜங்ஷனில் ரயிலை மறித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் நிலையங்களில் இளைஞர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் நுழையாதவாறு அதிக அளவு காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் திருச்சி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு காரணம் கருதி நேற்று முதல் இன்று திங்கட்கிழமை வரை பயணம் செய்யும் பயணிகளை தவிர வேறு யாரும் ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என தெற்கு ரயில்வே கோட்டம் உத்தரவு பிறப்பித்துள்ளது. போராட்டத்தின் தன்மையைப் பொறுத்து இந்த உத்தரவு தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.