Skip to main content

பயிர்த்தொழில் பழகு நிகழ்ச்சி... பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

 

அரியலூர் மாவட்டம் விளாகம் கிராம பொறியியல் பட்டதாரியான கவுதம் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் வள்ளுவம் இயற்கை வழி வேளாண்மை பண்ணையை வைத்துள்ளார். அதில் பல பயிர் சாகுபடியை குறைந்த இடங்களில் செய்யும் முறையை சன்னாவூர் எல்லைக்குட்பட்ட 3 ஏக்கர் நிலப்பரப்பில் செய்து வருகிறார். அவரது வயலில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் செய்வது குறித்து ஆர்வத்தை உருவாக்கும் வகையில் பயிர்த்தொழில் பழகு என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

 

students




இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தனது பண்ணையில் மேற்கொண்டுள்ள இயற்கை விவசாயத்தில் பல பயிர் சாகுபடி குறித்து பொறியியல் பட்டதாரியான கவுதம் கூறுகையில், இயற்கை விவசாயத்தில் பூச்சி மேலாண்மைக்காக சாமந்தி செடிகள் 4000 நாற்றுகள், சூர்யகாந்தி 700 செடிகள், கற்றாழைச் செடிகள் 2000,  கொட்டமுத்து என்கிற ஆமணக்கு 1500 செடிகள், தீமை செய்யும் பூச்சிகளை பறவைகள் மூலம் கட்டுப்படுத்துவதற்காக பறவைகள் உட்காருவதற்காக 100 பலகை மற்றும் குச்சிகள்  அமைப்பு, உயிர்வேலியாக அன்னாசி 2000 செடிகள், தீவனப்புல் வகையான கிளரிசெடியா 1000, மல்பெரி செடி 1500,  அகத்தி கீரை செடி 400, ஆறடிக்கு ஒரு தேக்கு வீதம் 200 மரக்கன்றுகள், காற்றைத் தடுக்கும் வகையில் யூக்கலிப்டஸ் எனும் தைல மரம் 4500 மரங்கள், சூப்பர் நேப்பியர் தீவனப்புல் மூடாக்குக்காகவும் மாட்டுத் தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது, வாழைக் கன்றுகள் 1800, பப்பாளி பழ மரக் கன்றுகள் 2000, கொய்யாப் பழ மரக்கன்றுகள் 300, மாமரக்கன்றுகள் 60, முருங்கை மர விதைகள் மற்றும் குச்சி மூலம் 1100 செடிகள், தக்காளி 2000 நாற்றுகள், மிளகாய் 7000 நாற்றுகள், கத்தரி கன்றுகள் 2500, வெண்டைக்காய் செடி 2000, முள்ளங்கி 1500 செடிகள், விரலி மஞ்சள் செடி 4000, மரத்துவரை செடி விதை மூலம் 1500, உளுந்து 1000 செடிகள், மரவள்ளிக் கிழங்கு 1500 செடிகள், எலுமிச்சை 10, தர்பூசணி 200 செடிகள், வெண் பூசணி 100, பரங்கிக்காய் செடி 100, சுரைக்காய் செடி 100, நெல்லிக்காய் செடி 5, நாவல் 7, ஆப்பிள் 2, தென்னை 5, திருவோடு மரம் 1, பாக்கு மரம் 2, பாதாம் மரம் 2, புளியமரம் 2, மணத்தக்காளி, கருந் துளசி, பிரண்டைச் செடிகள் 200, கருவேப்பிலை செடி 100, சீத்தாப்பழம் 100, மாதுளை 50, முந்திரி 5, அத்திமரம் 1, சாத்துக்குடி 5, குருவிகளை ஈர்ப்பதற்காக வெள்ளைச் சோளம் 1000 செடிகள், உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட பல பயிர் சாகுபடியை செய்யப்பட்டுள்ளது.

 

பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் மீது ஈடுபாடு அதிகரிக்கும் வகையில் இயற்கை விவசாயியின் தோட்டத்திலேயே  பயிர்த்தொழில் பழகு என்ற அரிய நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இது குறித்து கவுதம் கூறுகையில், ரெயின் ஹோஸ் எனப்படும் மழைநீர் தெளிப்பான் என்ற நவீன தொழில்நுட்பத்தில் இயற்கையான மழை நீர் போல காற்றில் கலந்து உயிர்ச்சக்தியாக மாற்றிடும் வகையில் நீர்மேலாண்மை செய்து குறைந்த நீரில் அதிகளவில் பல பயிர் சாகுபடியைச் செய்து வருவதாக கூறினார். 


 

மேலும் இயற்கை உரங்களாக மண்புழுவை அதிகரிப்பதற்காக சாணம் கோமியத்தைப் பயன்படுத்தி ஜீவாமிர்தம் கரைசல் வாரம் ஒருமுறை தெளிப்பதாகவும், பூச்சி மேலாண்மைக்காக வேப்ப எண்ணெய் பூங்கா எண்ணெய், காதி சோப் 100 லிட்டர் நீர் கரைசலில் 15 நாட்களுக்கு ஒரு முறை கைத்தெளிப்பான் பயன்படுத்தாமல் ரெயின் ஹோஸ் மூலமாகவே ஆட்களின் உதவியின்றி பயிர்களுக்கு வழங்கப்படுகிறது. தினசரி வயல்களில் வேலை செய்வதற்காக 2 பேர் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர். வயல்களில் தோன்றும் களைகளை அகற்றி மூடாக்குக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது மேலும் மண்ணில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கவும் மண்புழுவிற்கு தீவனமாகவும் பயன்படுகிறது என்றார். 

 

இதில் தஞ்சை, திருச்சி, அரியலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். 

 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயற்கை வாழ்வியலாளரும் வரலாறு மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான தங்க சண்முக சுந்தரம் கூறுகையில், இளைஞர்கள் எந்த துறையை சார்ந்த படிப்பில் இருந்தாலும் விவசாயத்தை முன்னெடுக்க வரவேண்டும். விவசாயத்தை முறையாக செய்தால் இலாபகரமான தொழிலாக மாற்ற முடியும். தினசரி வருமானம் தரக்கூடிய வகையில் விவசாயிகள் பல பயிர் சாகுபடியை செய்ய முன் வரும் போது விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும். இதன் மூலம் மண்ணுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இதன் மூலம் இரசாயன உரங்கள் துளி கூட பயன்படுத்த தேவையில்லை. மேலும் தன்னார்வலர் கவுதம் அரசின் நிதி உதவி ஒரு பைசா கூட பெறவில்லை என்பது வியப்பாக உள்ளது. 



 

மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட ஆர்வலரின் வயலைப் பார்வையிட்டு நிதி உதவி செய்து ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர் கோவில் எசனை சரவணன், இயற்கை ஆர்வலர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சிட்டிசன், பிரேம சொரூபன், பரத், பாலமுருகன், விளாகம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பயிர்த்தொழில் பழகு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அரியலூர் மாவட்டத்தின் முன்னோடி விவசாயியின் வயலில் நடந்த இந்நிகழ்ச்சி தங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர். 

 

இளைஞரின் முயற்சி அரசு துணை நிற்க வேண்டும் என அனைவரும் தங்களது கருத்தை வலியுறுத்தினர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்