
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் செம்பட்டி சாலையில் உள்ள பெண்கள் உயர்நிலை பள்ளியில் தொப்பம்பட்டியை சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகள் பிருந்தா 9வது வகுப்பு படித்து வந்துள்ளார். இதுபோல அப்பள்ளியில் கீர்த்தனா என்ற மாணவியும் படித்து வந்துள்ளார். இந்த இரண்டு மாணவிகளும் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு வருவதாகக் கூறப்படுகிறது. பள்ளியில் கணித ஆசிரியையாக இருக்கும் பிரேமலதா என்பவர் மாணவி பிருந்தா மற்றும் கீர்த்தனாவை மாணவிகள் மத்தியில் நிற்க வைத்து மாணவிகளின் ஜாதியை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவியரிடம் யாரும் பழக்கவழக்கம் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் மாணவிகளுக்கு பள்ளி வாகனத்தில் இருக்கையில் அமர வைக்கக் கூடாது என்றும் கூறியதாக மாணவியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 15ம் தேதி ஆசிரியை பிரேமலதா மாணவிகளை கடும் சொல்லால் திட்டியதால் மாணவிகள் இருவரும் பள்ளியின் கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த பினாயிலை குடித்துள்ளனர். இதைப் பார்த்த மாணவிகள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்கவே, மாணவிகளை உடனடியாக சின்னாளபட்டியில் உள்ள அரசு சமுதாயநல மையத்திற்கு கொண்டுசென்று முதலுதவி அளித்த பின்பு திண்டுக்கல்லில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மாணவிகள் இருவரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீதிபதி மருத்துவமனைக்கு சென்ற மாணவிகளிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த விஷயம் ஈரோடு தேர்தல் பிரசாரத்திலிருந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தெரியவே உடனே மருத்துவமனை டீனை தொடர்பு கொண்டு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

அதன்பின்னர் நேற்று காலை 8 மணியளவில் தொப்பம்பட்டிக்கு மாணவிகளை அழைத்துவர வந்த பள்ளி வாகனத்தை சிறைபிடித்த தொப்பம்பட்டி கிராம மக்கள் மாணவிகளை ஜாதியை சொல்லி திட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போராட்டம் நடத்தியுள்ளனர். அதன் பின்னர் தொப்பம்பட்டியை சேர்ந்த ஊர் முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி வாகனத்தை விடுவிக்க செய்தனர். அதன்பின்னர் கிராம மக்கள் நேரடியாக சின்னாளபட்டி காவல்நிலையத்திற்கு வந்து முற்றுகையிட்டதோடு ஆசிரியை பிரேமலதா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோஷமிட்டனர். மாணவியின் தாயார் முனீஸ்வரி சின்னாளபட்டி காவல்நிலையத்தில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு அளித்தார். அதன்பின்பு சின்னாளபட்டி காவல்நிலையத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன், காவல்துறை கண்காணிப்பாளர்கள் இமானுவேல் ராஜ்குமார், ராஜாமுரளி, உதயகுமார் ஆகியோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.

அதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் சந்தோஷ், வட்டாட்சியர் சரவணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், நன்னடத்தை அலுவலர்கள் சேமலா, சரஸ்வதி, ஆகியோர் செம்பட்டி சாலையில் உள்ள பள்ளிக்கு சென்று பள்ளி தலைமையாசிரியர் மற்றும் புகார் செய்யப்பட்ட ஆசிரியையிடம் 2 மணிநேரம் விசாரணை செய்த பின்பு பள்ளிக்கு மாணவியை வரவழைத்து விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றனர். இதுகுறித்து கேள்விப்பட்டவுடன் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் பள்ளிக்கும் வந்து முற்றுகையிட்டு மறியலிலும் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். அதன் பின்னரும் காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஆசிரியைக்கு சாதகமாக செயல்படுவதாகவும் கூறி மீண்டும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய காவல் துணை கண்காணிப்பாளர்கள் இமானுவேல் ராஜ்குமார், ராஜா முரளி, உதயகுமார் ஆகியோர் முறைப்படி நடவடிக்கை எடுப்பதற்காக நாங்கள் தயாராக உள்ளோம். பள்ளி நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற்ற பின்பு வழக்குப் பதிவு செய்வோம் எனக் கூறியதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், பிரச்சனைக்குரிய ஆசிரியை பிரேமலதாவை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்வதாக காவல் நிலையத்திற்கு கடிதம் கொடுத்ததை அடுத்து விசாரணையை போலீஸார் துரிதப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பள்ளி மாணவியின் தாயார் முனீஸ்வரி கூறுகையில், ''பட்டியலின பெண்ணை ஜாதியை சொல்லி திட்டிய ஆசிரியர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே இந்த ஆசிரியையால் வீரக்கல்லை சேர்ந்த ஒருமாணவி கிணற்றில் குறித்து கைகால்கள் முறிந்த நிலையில் உள்ளார். தொடர்ந்து இந்த பள்ளியில் ஜாதிய வன்மத்துடன் ஆசிரியைகள் நடந்து கொள்வதால் மனித உரிமை ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
இது பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மாநில செய்தித் தொடர்பாளர் ரெங்கராஜன் கூறுகையில், ''சமூக நீதியுடன் செயல்படும் இந்த பள்ளிகளில் தற்போது ஜாதிவெறியுடன் செயல்படும் சில ஆசிரியைகளால் பள்ளிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் தயவு தாட்சண்யம் இல்லாமல் ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்து அரசுப் பள்ளிகளுக்கு அவர்களை அனுப்ப வேண்டும். பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.