சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையின் இரண்டு கரையோர பகுதிகளிலும் உள்ள தனியார் கல்லூரிகளின் அருகில் கரைகளை அகலப்படுத்தும், சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (12.11.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்குப் பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பருவ மழை பெய்துவரும் நிலையில், முதலமைச்சர் உத்தரவின்பேரில் இன்று காலை சென்னை மாநகராட்சி அலுவலகம் மற்றும் எழிலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையம் ஆகிய இடங்களில் சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், ஆணையாளர் ஆகியோருடன் நேரில் ஆய்வு செய்தோம்.
நேற்று இரவில் இருந்து பரவலாக மழை பெய்து வருகின்றது. இருந்தாலும், எந்த இடத்திலும் தண்ணீர் தேங்கவில்லை. இந்த நிலையில், தற்போது ஒக்கியம் மடுவு பகுதியில் இன்றைக்கு நேரில் ஆய்வு செய்து உள்ளோம். ஏற்கனவே கடந்த மாதம் 13ஆம் தேதியன்று இதே இடத்தில் ஆய்வு செய்தோம். ஆகாயத்தாமரைகளை அகற்றினோம். அதனால் பெரிய அளவில் தண்ணீப் தேங்காமல் இருந்தது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து வெள்ளநீர் வெளியேறி, இந்த ஓக்கியம் மடுவு வழியாகத் தான், பக்கிங்காம் கால்வாய்க்கு சென்று, பின்னர் அங்கிருந்து கடலில் கலக்கிறது. ஆனால், இங்கு ஏற்கனவே இருக்கும் நீர்வழித்தடத்தின் அகலம் மாறுபட்ட அளவுகளில் இருந்து வந்தது. தண்ணீர் வெளியேறுகின்ற பாதை குறுகலாக இருந்ததால், வெள்ளநீர் தடையின்றி வெளியேற முடியாத ஒரு சூழல் இருந்தது. அப்படி வெளியேற முடியாத வெள்ளநீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொள்ளும் ஆபத்தும் இருந்தது. எனவே அதுகுறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் வலியுறுத்தி இருந்தார்.
அதன்படி, நீர்வளத்துறையினர் ஆய்வு செய்தார்கள். அப்போது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து ஒக்கியம் மடுவுக்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடமானது, வெள்ளநீர் வெளியேறுவதற்கு தடங்கலாக இருந்தது கண்டறியப்பட்டது. தற்போது, அனைத்து சட்ட வழிமுறைகளையும் பின்பற்றி சம்பந்தப்பட்ட அந்த தனியார் நிலத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. கையகப்படுத்தப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட இடத்தினை தற்போது, அகலப்படுத்தி வருகின்றோம். ஏற்கனவே, 80 மீட்டர் அகலம் இருந்த அந்த இடத்தில், நீர் தேங்காமல் உடனுக்குடன் வடிகின்ற வகையில், 130 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் விரைவில் நிறைவடையவுள்ளன. இப்பணிகள் நிறைவுற்றால், 7 ஆயிரம் கன அடி மட்டுமே தண்ணீர் வெளியேறிய நிலையில் இருந்து, சம்பந்தப்பட்ட இடத்தில் அரசின் துரித நடவடிக்கையால், தற்போது 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும் தற்காலிக பணியாக அருகிலுள்ள இன்னொரு தனியார் கல்லூரி எதிரே உள்ள மணல் திட்டுகளை ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் 5 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சீரமைக்கும் பணி, மாநகராட்சி நிதி உதவியுடன் நடைபெற்று வருகிறது. இந்த இரு பணிகளையும் விரைவாக முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தி இருக்கின்றோம். இன்னும் மூன்று அல்லது, நான்கு நாட்களில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். ஆகவே, சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம். பொதுமக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.