திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு நாளை (27.01.2023) நடைபெற உள்ளது. குடமுழுக்கை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறைக்கான அறிவிப்பை ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் ஏற்கனவே திட்டமிட்டுள்ள தேர்வுகள் பாதிக்காத வகையில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது எனவும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மறுநாள் ஜனவரி 28 ஆம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 27 ஆம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணி வரை குடமுழுக்கு நடைபெறும் என்றும், குடமுழுக்கைக் காண மலைக் கோவிலுக்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள் காலை 4 மணி முதல் 7.15 மணிக்குள் மலைக் கோவிலுக்குச் சென்று விட வேண்டும். கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக ரோப் கார் மற்றும் வின்ச் ஆகியவற்றில் 2 ஆயிரம் பக்தர்களும் யானை வழிப் பாதை வழியாக 4 ஆயிரம் பக்தர்களும் என மொத்தம் 6 ஆயிரம் பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர். குடமுழுக்கின் போது ஹெலிகாப்டர் மூலம் கோபுரங்களுக்கு மலர் தூவப்படவுள்ளது. அப்போது மலை மீது உள்ள பக்தர்கள் மீது குடமுழுக்கு செய்த நீர் தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் குடமுழுக்கைக் காண விரும்பும் பக்தர்கள் இணைய தளத்தில் பதிவு செய்து குலுக்கல் முறையில் 2 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. வெளியூர் பக்தர்களுக்காக 26 ஆம் தேதி இரவு 11 மணி வரை ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள வேலவன் விடுதியில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க பழனி - தாராபுரம் சாலையில் உள்ள மால்குடி மருத்துவமனை அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் அனைத்தும் தற்காலிக பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்படும். அங்கிருந்து 35 இலவச சிறப்பு பேருந்துகள் மூலம் பழனி நகருக்குள் வந்து மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பழனி நகருக்குள் வரும் வாகனங்களை நிறுத்த நான்கு இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு 1500 வாகனங்கள் வரை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடமுழுக்கு நிகழ்வையொட்டி 5000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பக்தர்களைக் கண்காணிக்க 10 ட்ரோன் கேமராக்களும், 150 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு மலைக்கோயில் பாதை உள்பட அனைத்துப் பகுதிகளும் கண்காணிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தைப்பூசம் நெருங்குவதை ஒட்டி பாத யாத்திரையாக தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி முருகனுக்கு குடமுழுக்கு நடைபெறுவதால், இதையொட்டி தமிழகத்தில் உள்ள திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, கரூர், ஈரோடு, திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் சென்னை உள்பட பல மாவட்டங்களிலிருந்து மூன்று லட்சம் பக்தர்களுக்கு மேல் குடமுழுக்கில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை பழனி சன்னிதானத்தில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி அடிவாரத்தில் உள்ள கோவில்களில் இன்று குடமுழுக்கு நடந்து வருவதால் அதில் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். அதேபோல் பழனி நகரமே குடமுழுக்கை முன்னிட்டு விழாக் கோலமாக காட்சி அளித்து வருகிறது.