ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜெயலலிதாவை வாழ்த்தி சாலைகள் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைத்து வருகிறார்கள். அதுபோல் துணை முதல்வரான ஓ.பி.எஸ்-ன் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடி, கம்பம், சின்னமனூர், கூடலூர், ஆண்டிப்பட்டி உள்பட பல பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள் ஜெயலலிதாவை வாழ்த்தி வைக்கப்பட்டுள்ளன.
இதில் ஜெயலலிதாவின் படத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் படத்தையும் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் தேனியில் உள்ள பெரியகுளம் ரோடு, கான்வென்ட், ரயில்நிலையம் செல்லும் வழி ஆகிய பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேனர்களை கட்சிப் பொறுப்பாளர்கள் வைத்துள்ளனர்.
இதில் இருபதுக்கும் மேற்பட்ட பேனர்களை சில மர்ம நபர்கள் பிளேடால் அங்கங்கே கிழித்து விட்டனர். இதைக் கண்டு அ.தி.முக.வினர் பெரும் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல் டிடிவி ஆதரவாளர்களும் இதேபோல் மாவட்டம் அளவுக்கு ஜெ.வின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். அதுபோல் தேனியில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் ஐந்தையும் சில மர்ம நபர்கள் சரமாரியாக கிழித்துவிட்டனர்.
இதனால் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மற்றும் டிடிவி ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்ததோடு மட்டுமல்லாமல், இப்படி ஜெ.வுக்காக வைக்கப்பட்ட பேனர்களை கிழிக்க சமூக விரோதிகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி தேனி அல்லிநகரில் உள்ள போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து போலீசாரும் வழக்குப்பதிவு செய்து பேனரை கிழித்த நபர்களை கண்டுபிடிக்கும் பணியிலும் இறங்கியுள்ளனர்.