Skip to main content

மக்கள் நினைத்தால் டாஸ்மாக் கடைகளை தடுக்கலாம் - புதிய விதிகள் குறித்து தமிழக அரசு விளக்கம்

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

Opposition to Tasmac stores - Tamil Nadu government explanation in court!

 

டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வந்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

 

டாஸ்மாக் கடைகள் வேண்டாமென்று கிராம பஞ்சாயத்துகள், கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்றினால், அதை செயல்படுத்துவது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் இரு வேறு உத்தரவுகளைப்  பிறப்பித்திருந்தது. இதனால் இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று (15/02/2022) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது, டாஸ்மாக் கடைகளை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பதாகக் கூறி, திருத்த விதிகள் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. 

 

ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், அந்த திருத்த விதிகளில் கூறப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்குகளை மீண்டும் சம்பந்தப்பட்ட அமர்வுகளுக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், முழு அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட கேள்வியையும் முடித்து வைத்தனர். 

 

இதனிடையே, குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், பஞ்சாப், ராஜஸ்தான் மூலமாக அம்மாநிலத்திற்கு மதுபானங்கள் கொண்டு வருவதாக தெரிவித்த நீதிபதிகள், அதேபோல் ஒரு கிராமத்தில் டாஸ்மாக் கடை தொடங்க எதிர்ப்பு தெரிவித்தால், அருகில் உள்ள கிராமங்களில் அமைந்துள்ள கடைகளுக்கு மக்கள் செல்வார்கள் எனும்போது கிராம சபை அல்லது பஞ்சாயத்துக்கள் போடும் தீர்மானத்தினால் எந்தப் பயனும் இல்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்