தந்தையை மகன் கொடூரமாகத் தாக்கும் வீடியோக்கள், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வர, அதன் பின்னணி குறித்து விசாரிக்கத் தொடங்கினோம். கிடைத்த தகவல்கள் பகீர் ரகம்.
பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேலு. அந்தப் பகுதியில் வசதியானவர். அவரை ஜமீன்தார் என்றுதான் அப்பகுதி மக்கள் அழைத்து வந்தனர். இவருக்கு ஹேமா என்ற மனைவியும், சந்தோஷ் என்ற மகனும் சங்கவி என்ற மகளும் உள்ளனர். தன் பிள்ளை களுக்கு இவர், திருமணமும் செய்து வைத்து விட்டார்.
இந்த நிலையில் மகன் சந்தோஷ், தன் தந்தை குழந்தைவேலுவிடம் சொத்துக்களைத் தன் பெயருக்கு எழுதித்தரும்படி கேட்டு தகராறு செய்துவந்திருக்கிறார். இதனால், தன் மனைவி மூலம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் கிடைத்த அமிர்தா சேகோ ஃபேக்டரியை, தன் மகன் சந்தோ ஷிடம் ஒப்படைத்திருக்கிறார் குழந்தைவேலு. இதன் பின்னரும் சொத்துக்களைக் கேட்டு சந் தோஷ் டார்ச்சர் தர... அண்மையில் குழந்தை வேலு 50 லட்ச ரூபாயை மகன் சந்தோஷிடம் கொடுத்திருக்கிறார். அதையும் சந்தோஷ் வட்டித் தொழிலில் முதலீடாக்கி இருக்கிறாராம்.
இந்த நிலையில் கடந்த 6.2.2024-ல் அப்பா குழந்தைவேலுவை சந்திக்க வந்த சந்தோஷ், மிச்ச சொத்துக்களையும் தனக்குத் தரவேண்டும் என்று சண்டை பிடித்திருக்கிறார். குழந்தைவேலுவோ, முடியவே முடியாது என்று மறுத்திருக்கிறார். இந்த நிலையில் அன்று வீட்டு முகப்பில் அமர்ந்திருந்த அப்பா குழந்தைவேலுவைப் பார்த்த சந்தோஷ், திடீரென மூர்க்கமாகி கடுமையாக முகத்திலேயே சரமாரியாகத் தாக்க ஆரம்பித்தார். மகனின் எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போன குழந்தைவேலு, அதைத் தடுக்கக் கூட சக்தியற்றவராய் இருக்க, அவர் முகமெல்லாம் ரத்தம் கொட்டியது. அவர் பல்லும் உடைந்தது.
அப்போது வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவர, சந்தோஷ் அங்கிருந்து மெல்ல நழுவினார். தாக்கப்பட்ட குழந்தைவேலுவைப் பார்த்து அதிர்ச்சியானவர்கள், குழந்தைவேலுவை அவசர அவசரமாக பெரம்பலூர் மருத்துவமனை ஒன்றுக்கு காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்படி மருத்துவமனைக்கு அவரை காரில் ஏற்றும் போதும், திடீரெனப் பாய்ந்து வந்து மறுபடியும் தாக்கியிருக்கிறார் சந்தோஷ். அவரிடமிருந்து குழந்தைவேலுவை மீட்டு, மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்று அட்மிட் செய்தனர். அங்கே தங்கி சிகிச்சை எடுத்ததால் சற்று உடல்நலம் தேறி எழுந்திருக்கிறார் குழந்தைவேலு.
மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய குழந்தைவேலு, தன் மகன் தன்னைத் தாக்கிய சம்பவத்தால் ரொம்பவே அப்செட்டாகி இருந்திருக் கிறார். அந்த தாக்குதல் காட்சிகள் சி.சி .டி.வி. கேமராவில் பதிவாகி இருந்ததால், அதை எடுத்து தனது உறவினர்கள், நண்பர் கள் என பலருக்கும் அவர் அனுப்பி வைத் தார். அந்த வீடியோ காட்சிகள்தான் வைர லாகி பலரையும் பகீரில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்த நிலையில், மனமுடைந்த நிலையில் இருந்த குழந்தைவேலு, அடிக்கடி மது அருந்த ஆரம்பித்தாராம். இப்படிப் பட்ட சூழலில் கடந்த 21ஆம் தேதி காலை, அவரது அறைக்குச் சென்று அவரை எழுப்ப முயன்றிருக் கிறார்கள் அவர் குடும்பத்தினர். அப்போதுதான், அவர் தன் கட்டிலில் இருந்து கீழே உருண்ட நிலை யில் இறந்துகிடப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், அவர் முதல்நாள் இரவு பாத்ரூமில் ரத்த வாந்தி எடுத்திருப்பதும் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உறவினர்கள், இது குறித்து வேப்பந்தட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்க, அவர்கள் குழந்தைவேலுவின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினர்.
இந்த விவகாரத்தை நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளரான வழக்கறிஞர் விஜயராகவன் உள்ளிட்டவர்கள் கையில் எடுத்த நிலையில், அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது காவல்துறை.
இறந்து போன குழந்தைவேலுவை, பெற்ற மகனே தாக்கியதை, அந்த வீடியோ காட்சிகள் மூலம் அறிந்துகொண்ட போலீஸ், மகன் சந்தோ ஷை அதிரடியாகக் கைது செய்தனர். 25ஆம் தேதி வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, அவரை 15 நாள் ரிமாண்ட்டில் கொண்டுபோய் சிறையில் அடைத்திருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கத் தாமதப்படுத்திய எஸ்.ஐ. பழனிச்சாமியை, ஆயுதப்படைக்கு இடமாற்றி பெரம்பலூர் எஸ்.பி. சியாமளாதேவி உத்தரவிட்டார்.
ஏரியாவாசிகளோ, "குழந்தைவேலுவும் அடாவடிப் பேர்வழிதான். எப்போதும் அடியாட் களுடன்தான் இருப்பார். சில வருடங்களுக்கு முன் அவர் பட்டியலின நபர் ஒருவரை தாக்கிய விவகாரம் பெரிதானபோது, அமைச்சர் ஒருவர் தலையிட்டு சமாதானம் செய்யப்பட்டதாம். எனினும் அவரை, பெற்ற மகனே இப்படி கடுமையாகத் தாக்கியதைப் பார்க்கும்போது, மனதைப் பிசைகிறது''”என்கிறார்கள் வருத்தமாய்.
இப்படியும் ஒரு மகனா?
-சுப்பு