விளைநிலங்களில் புதைக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி குழாய்களிலிருந்து கசியும் கச்சா எண்ணெயால், பயிரிட்ட நெற்பயிர்கள் எண்ணெயில் மிதப்பதைக் காணமுடியாமல் கண்ணீர் விடுகின்றனர் திருவாரூர் விவசாயிகள்.
திருவாரூர் கீழ எருக்காட்டூர் கிராமத்தில் விளைநிலத்தில் பதிக்கப்பட்டிருந்த எண்ணெய்க் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்து, வயல் முழுவதும் பரவியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், "கடந்த நான்கைந்து வருடங்களாக, பத்துக்கு மேற்பட்ட விளைநிலங்களில் கச்சா எண்ணெய்க் கசிந்து விளைநிலங்கள், வேளாண்மை செய்யமுடியாத நிலங்களாக மாறி உள்ளது. இங்குள்ள சிறு, குறு மற்றும் ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் எண்ணெய்க் கசிவால் முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்துவருகிறார்கள்" என்றார்.
கீழ எருக்காட்டூர் மட்டுமல்ல, மேல எருக்காட்டூர், கமலாபுரம் பகுதிகளில் ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமாக சுமார் 20 எண்ணெய்க் கிணறுகள் உள்ளது. அந்தக் கிணற்றிலிருந்து வெள்ளக்குடியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்கள் விவசாய நிலங்களின் மீது செல்கிறது. அப்படிச் செல்லும் குழாய்களில், கீழ எருக்காட்டூர் விவசாய நிலம் வழியாகச் செல்லும் குழாயில் தான் தற்பொழுது எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியில் தனசேகரன் என்பவரது விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி குழாயில் இருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. தற்போது அதே குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு ஏக்கர் சம்பா பயிர் கச்சா எண்ணெயில் மூழ்கி கிடக்கிறது. 2018 ஆம் ஆண்டு தனசேகரனின் விளைநிலத்தில் புதைக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்தது. அதற்காக பல லட்ச ரூபாய் செலவில் மண்ணை மாற்றி, திரும்பவும் விவசாயம் செய்துள்ளார் தனசேகரன்.
ஆனால், தற்போது அவர் நிலத்திற்கு அருகில் உள்ள நிலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "அரசாங்கத்திற்குச் சொந்தமான எத்தனையோ இடங்கள் இருக்கிறது. அதன் வழியாக இந்தக் குழாயைக் கொண்டு செல்ல வேண்டும். எங்க விவசாய நிலங்களில் இந்த ஓ.என்.ஜி.சி குழாய்களைக் கொண்டு செல்ல வேண்டாம். ஒரு ஏக்கர் சம்பாவும் எண்ணெயில மெதக்குதுங்க எனக் கண்ணீரோடு தெரிவித்தார். மேலும், அப்பகுதி விவசாயிகளும் ஓ.என்.ஜி.சி குழாயை வேறு வழியில் மாற்றியமைக்க கோரிக்கை வைத்தனர்.
கச்சா எண்ணெய்யை கசியத் தொடங்கி சுமார் 15 மணி நேரம் கழித்து ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் நிகழ்வு இடத்திற்கு வந்து பாதிப்புகளைச் சீரமைக்கும் பணியில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் முறையான சான்றிதழ் பெற்றுக் கொடுத்தால், இழப்பீடு வழங்கப்படும் எனவும் ஓ.என்.ஜி.சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.