புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சி பொற்பனைக்கோட்டை கிராமத்தில் உள்ள சங்ககால கோட்டையின் உள்பகுதியில் உள்ள நீர்வாவிக்குளத்திற்கு வடக்கு பக்கம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இனியன் இயக்குநராகக் கொண்டு அகழாய்வுக் குழுவினர் கடந்த 3 நாட்களாக அகழாய்வுப் பணிகளை செய்து வருகின்றனர். சுமார் 4 அங்குலம் ஆழத்திற்கு குழி அமைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் பழைய கட்டுமானம் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் கோட்டையின் மேற்கு நுழைவாயிலுக்கு தென்புற கோட்டை மேட்டிலுள்ள மதில் சுவரை ஒட்டி புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் தலைமையில் கோட்டைச்சுவரின் செங்கல் கட்டுமானங்கள் கோட்டையின் முழுப்பரப்பிலும் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செங்கல் கட்டுமானத்திற்கு அருகே இருபதுக்கும் மேற்பட்ட உடைந்த கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூரை ஓடுகள் ஒரு ஓடு மற்றொரு உடன் பொருந்தும் வகையில் காடி அமைக்கப்பட்டுள்ளது. (இன்டர்லாக் முறை) மேலும் ஓட்டின் மேற்பகுதியில் ஆணி பொருத்துவதற்கான துளையுடன் காணப்படுகிறது. இதன் மூலம் ஆணி, மரத்தில் பொருத்தப்பட்டு இன்றைக்கு உள்ள அதே கூரை வீட்டின் அமைப்புடன் இருந்திருக்கும் என அனுமானிக்க முடிகிறது.
கோட்டையின் மேற்குப் புற சுவரில் வீரர்கள் தங்கியிருப்பதற்கு அமைக்கப்பட்ட கண்காணிப்பு அறைகளில் இந்த ஓடுகள் பயன்படுத்தியிருக்க வேண்டும் என அனுமானிக்க முடிகிறது. இந்த மேலாய்வில் தொல்லியல் ஆர்வலர்கள் ச.ஆனந்தன், இளங்கோவன்,தமிழ்க்குமரன், சீஅ.மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர். கண்டுபிடிக்கப்பட்ட ஓடுகள் அகழ்வாய்வு மேற்கொண்டிருக்கும் திறந்தநிலைப் பல்கலைக் கழக பேராசிரியரும் அகழ்வாய்வு இயக்குனருமான இனியன் வசம் ஒப்படைக்கப்பட்டது.