Skip to main content

மர்மமான முறையில் முதியவர் மரணம்! 

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

 old man dies Mysterious

 

திருச்சி மாவட்ட தாத்தயங்கார்பேட்டை பகுதியில் உள்ள நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(60). இவர், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதால், இவர் தனியாக வசித்து வருகிறார். 


இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் ஆடுகளுக்கு புல் அறுப்பதற்காக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மகன் மோகன்பாபு பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். இதனிடையே சரவணன் பொம்மநாயக்கர் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். இதுகுறித்து மோகன்பாபு தாத்தையங்கார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர் இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி; லால்குடியில் பரபரப்பு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
A rowdy who was shooted; There is excitement in Lalgudi

பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள ஆதிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கலைப்புலி ராஜா. அந்தப் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்த கலைப்புலி ராஜா மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்தப் பகுதியில் ரவுடியாகவும் வலம் வந்தார். கலைப்புலி ராஜா போலவே நவீன்குமார் என்பவரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்துள்ளார்.

கலைப்புலி ராஜா மற்றும் நவீன்குமார் ஆகிய இருவர்களுக்கிடையே யார் பெரியவர் என்ற போட்டியால் அடிக்கடி மோதல் எழுதுவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து நவீன் குமாரை வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரவுடி கலைப்புலி ராஜாவைத் தேடி வந்தனர்.

இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது சிறுகனூர் பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த கலைபுலி ராஜாவை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்பொழுது பதிலுக்கு ரவுடி கலைப்புலி ராஜா போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதால் தற்காத்துக் கொள்வதற்காக காலில் சுட்டதில் பலத்த காயமடைந்த ராஜா கீழே விழுந்தார். உடனே அவரைப் பிடித்த போலீசார் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஸ்.பி வருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பிரபல ரவுடி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி லால்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

‘காசெல்லாம் இல்ல... நிலக்கடலை கொடு..’ - பட்டாணிக் கடையில் உதவி ஆய்வாளர் அட்ராசிட்டி

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
special sub inspector asked for free groundnuts at a pea shop

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் அருகே பட்டாணிக் கடை வைத்திருப்பவர் ராஜன் பிரேம்குமார். இவர் அனைத்து வணிகர்கள் நலச் சங்க மாவட்டத் தலைவராக உள்ளார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இவரது கடைக்குச் சென்ற ஸ்ரீரங்கம் காவல் நிலைய எஸ்எஸ்ஐ ராதா, அங்கு வேலை பார்த்த பணியாளரிடம்  வறுத்த நிலக்கடலை கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, கடைக்குள் இருந்தபடியே நபர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில், நான் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில்தான் பணிபுரிகிறேன். வேறு ஸ்டேஷனிலிருந்தா வந்து கேட்கிறேன். கொஞ்சம் கொடுப்பா என கெஞ்சலாக கேட்கிறார். அதற்கு, கடையில் இருந்த சிறுவன்.. நீங்க கேட்டீங்க ஆனா காசு தரலயே சார்.. எனச் சொல்கிறார். ஆமா, கொஞ்சமாதான கேட்டேன்.. அதுக்கென்ன காசு.. தம்பி இவ்ளோ மோசமா இருந்தா வாழ முடியாது.. நானும் கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலமைக்கு வந்திருக்கேன்.. யாரையும் ஏமாத்தி மேல வரல.. எனக் கூறிக்கொண்டே அவர் கடையை விட்டுச் செல்கிறார். அப்போது, அவர் கடலையை வாங்கிவிட்டுத்தான் செல்கிறார் எனச் சொல்லப்படுகிறது. அந்தப் பக்கம் போலீஸ்காரர் ராதா போனதும், இந்தப் பக்கம் இருக்கும் நபர் ஒருவர்,, வீடியோ எடுத்தாச்சு எனச் சொல்ல, கடை முதலாளி, வீடியோ எடுத்துட்டியா எனக் கேட்க, அந்த வீடியோ அத்துடன் முடிகிறது.

இதுகுறித்து, பட்டாணி கடை உரிமையாளரும் மாவட்ட வணிகர் சங்கத் தலைவருமான ராஜன் பிரேம்குமார் வீடியோ ஆதாரத்துடன், திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினியிடம் புகார் செய்தார். இதையடுத்து, எஸ்எஸ்ஐ ராதாவை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் என்.காமினி அதிரடி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இதுகுறித்து சக போலீஸார் கூறும்போது, "SSI ராதா கொஞ்சம் வெகுளியானவர். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று கணக்கு போட்டு பேசத் தெரியாது. அவர் செய்தது தவறாக இருப்பினும், அவர் மீது புகார் அளித்தபின்னர், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வேண்டுமென்றே பரப்பியுள்ளனர்’’ என்று தெரிவித்தனர். ஏற்கெனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் காவல்துறை அதிகம் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற செயல்பாடுகள் காவல்துறை மீது கலங்கத்தை மட்டுமே ஏற்படுத்தும். அதனால், காமினி மேடம் எடுத்த முடிவு சரியானதே என்கின்றனர் மற்றொரு தரப்பைச் சேர்ந்த காவல்துறையினர்.