தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு உள்ளூர் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து வள்ளியம்மாள் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி, உத்தமபாளையம் வந்த செய்தி தெரியவர பொதுமக்களும் அதிமுக தொண்டர்களும் அங்கு திரளாகக் குவிந்தனர். ஆனால், கரோனா காரணமாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி, பிறகு அங்கு கூடியிருந்த பொது மக்களைப் பார்த்து கையசைத்தவாறே நன்றி தெரிவித்துச் சென்றார்.