Skip to main content

‘வீடு உன்னுது; விளம்பரம் என்னுது!’ -நோகடிக்கும் ‘நோ பார்க்கிங்’ அறிவிப்புகள்!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

 

“இப்படியே விட்டால் வீட்டு வாசலில் நிற்பவர்களின் கழுத்தில்கூட அந்த போர்டைத் தொங்கவிட்டு விடுவார்கள்.” என்று எரிச்சலாய்ச் சொன்னார் பங்களா வீட்டின் உரிமையாளர் ஒருவர்.  

விவகாரம் இதுதான் –

 

p

 

விருதுநகரில் மட்டுமல்ல. பல ஊர்களிலும்,  ஒவ்வொரு வீட்டின் கதவிலும்  நான்கைந்து போர்டுகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. ஆம். நம் வீட்டு வாசலில் யாரும் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று ஏதோ ஒரு நிறுவனம் அக்கறையுடன் எச்சரிக்கின்ற நோ பார்க்கிங் போர்டுகள்தான் அவை. இதற்கெல்லாம் வீட்டு உரிமையாளரின் அனுமதியைக் கேட்கிறார்களா என்றால் இல்லவே இல்லை. 

 

இன்றும்கூட,  ‘நோட்டீஸ் ஒட்டக்கூடாது’ என்று வீட்டுச் சுவற்றில் அறிவிப்பு செய்கிறார்கள்.   ‘மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கையும் விடுக்கிறார்கள்.  யார் வீட்டுச் சுவராக இருந்தால் என்ன? பசை தடவி போஸ்டர் ஒட்டிவிடும் வழக்கம் இருப்பதால்,  இப்படி ஒரு அறிவிப்பை அந்த வீட்டின் உரிமையாளரே செய்ய நேரிடுகிறது.  இனி வரும் காலத்தில்,   ‘என் வீட்டுக் கதவில் யாரும் நோ பார்க்கிங் போர்டு தொங்கவிடக்கூடாது; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 

 

n

 

தங்கள் நிறுவனத்துக்கும் வர்த்தகச் சின்னத்துக்கும் (brand) விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே,  வீடுகளின் வெளிக்கதவுகளில் நோ பார்க்கிங் போர்டைக் கட்டித் தொங்கவிட்டுச் செல்கிறார்கள். யாரோ கட்டிய வீட்டில் ஓசியாக விளம்பரம் செய்யும் உத்திதான், இந்த நோ பார்க்கிங் (வாகனங்களை இங்கு நிறுத்தக்கூடாது) அறிவிப்புகள். இந்த விளம்பர மோகம்,  பெரும் வியாதியாக மாறிவிட்டதன் விளைவுதான், ஒரே கதவில் நான்கைந்து நிறுவனங்களின் நோ பார்க்கிங் அறிவிப்புகள். போகிற போக்கைப் பார்த்தால், வீட்டில் உள்ளவர்களே, தங்கள் வாகனங்களை வீட்டின் முன்பாக நிறுத்தத் தயங்கும் அளவுக்கு, நோ பார்க்கிங் விளம்பரங்கள் மிரட்டிக்கொண்டிருக்கின்றன.  

 

வீட்டு உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல், கதவில் அத்துமீறி விளம்பரம் செய்வது, எல்லைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. ஏனென்றால், இதுபோன்ற செயல்களை எரிச்சலுடன் சகித்துக்கொள்ளப் பழகிவிட்டார்கள் நம்மக்கள்!

சார்ந்த செய்திகள்