Skip to main content

"கண்ணீர் விடவோ, கவலைப்படவோ தேவையில்லை" - 10 லட்சம் கொடுத்து பாராட்டிய அன்புமணி!

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

Anbumani Ramadass announces prize for women's hockey team

 

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், போராடி தோல்வி அடைந்த இந்திய மகளிர் அணிக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பல மாநில முதல்வர்களும் ஆறுதல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சிலர் அந்த அணியினருக்கு உதவித் தொகை மற்றும் வெகுமதிகளை வழங்கிவருகின்றனர். அதேபோல் இந்திய ஹாக்கி அணியினரின் போர்க்குணமிக்க ஆட்டத்தைப் பாராட்டும் வகையில் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 10 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளின் மகளிர் ஹாக்கி பிரிவில் நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியிடம் தோல்வி அடைந்ததை எண்ணி இந்திய வீராங்கனைகள் கண்ணீர்விட்டு கலங்கியது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்கள் போட்டியில் தோற்றிருக்கலாம், ஆனால் இந்தியர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் கண்ணீர் விடவோ, கவலைப்படவோ தேவையில்லை. மாறாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் பெருமிதம் கொள்ள வேண்டும்.

 

Anbumani Ramadass announces prize for women's hockey team

 

ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளின் அரைஇறுதி ஆட்டம்வரை இந்திய மகளிர் அணியினர் முன்னேறினார்கள். ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வரலாற்றில் இந்திய அணி அரைஇறுதி போட்டிக்கு தகுதிபெறுவது இதுவே முதல்முறை ஆகும். இந்திய அணியை பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனை ஆகும். இது ஒரு சாதனை என்பது கோடிக்கணக்கானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் இந்த சாதனையை படைப்பதற்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் அனுபவித்த வலியும், வேதனையும் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்காது.

 

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் பங்கேற்ற இந்தியா தவிர்த்த பிற நாட்டு அணியினருக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால், இந்திய மகளிர் ஹாக்கி அணியினருக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை. மிகவும் நெருக்கடியான சூழலில் போதிய வசதிகள் இல்லாத உள்ளூர் மைதானங்களில்தான் அவர்கள் பயிற்சிபெற்றனர். பிற நாட்டு அணிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஸ்பான்சர்ஷிப் கிடைத்தன. ஆனால் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு அத்தகைய உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. ஒதிஷா மாநில அரசுதான் சில கோடிரூபாய் உதவிகளை வழங்கியது. அதுவும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஓர் அணியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமானதல்ல.

 

இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு மிகப்பெரிய அளவில் ஒலிம்பிக் அனுபவம் இல்லை. இதுவரை இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமே இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்றிருக்கிறது. இதுதான் அவர்களின் மூன்றாவது ஒலிம்பிக் போட்டி ஆகும். ராணி ராம்பால் தலைமையிலான இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள 16 வீராங்கனைகளில் 8 பேருக்கு இதுதான் முதல் ஒலிம்பிக் போட்டி ஆகும். மற்றொருபுறம் வந்தனா கட்டாரியா என்ற வீராங்கனையின் வீட்டுமுன் சிலர் வன்முறையில் ஈடுபட்டதால் இந்திய வீராங்கனைகள் அனைவரும் கடுமையான மனஉளைச்சலில் இருந்தனர். இவ்வளவு நெருக்கடிகளையும் இடர்பாடுகளையும் தாங்கிக்கொண்டு இந்திய மகளிர் ஹாக்கி அணி அரைஇறுதி வரை முன்னேறியதும், ஆஸ்திரேலியா போன்ற உலகின் வலிமை வாய்ந்த அணிகளை வீழ்த்தியதும் இந்திய மகளிர் ஹாக்கி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனை ஆகும்.

 

இந்தியாவின் பெருமைமிகு மகள்களே... மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தின் முதல் பாதிவரை வலிமை வாய்ந்த பிரிட்டன் அணியைவிட அதிக கோல் அடித்து நீங்கள்தான் முன்னணியில் இருந்தீர்கள். கடைசியில்தான் ஆட்டம் திசைமாறியது. விளையாட்டுகளில் இது இயல்புதான். இதற்காக நீங்கள் கலங்க வேண்டாம். இன்றைய போட்டியில் தோற்றதற்காக கண்ணீர்விட்ட நீங்கள், அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று ஆனந்த கண்ணீர் விடப்போவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது. அதற்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இப்போதே எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணியினரின் போர்க்குணமிக்க ஆட்டத்தை பாராட்டும் வகையில் இந்திய அணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்