Skip to main content

கருவேல மரங்களின் கன்றை பிடுங்கி வந்து கொடுத்தால் ரூ.5 பரிசு...இளைஞர்களின் புதிய முயற்சி!

Published on 10/12/2019 | Edited on 10/12/2019


தமிழ்நாட்டில் வறட்சியை ஏற்படுத்தி  நீர்நிலைகளை தரிசாக்கி குடிதண்ணீருக்கு கூட அலையவிட்ட சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னாலும் அதைற்கும் ஒரு தடை வந்தது. நீதிமன்றம் சொன்ன நிலையில் வேகமாக செயல்படுவது போல காட்டிக் கொண்ட அரசு இயந்திரங்கள் பல முறை நீதிமன்ற கண்டனங்களையும் சந்திக்க நேர்ந்தது. இந்தநிலையில் பாதி சீமைக் கருவே மரங்கள் அழிக்கப்பட்டதை அடுத்து நல்ல மழையையும், நீர்நிலைகளையும் பார்த்த இளைஞர்கள் அப்படினால் மொத்த சீமைக் கருவேல மரங்களையும் அழித்துவிட்டால் தமிழ்நாடு மீண்டும் விவசாயத்தில் செழிக்கும் மாநிலமாக மாறும் என்று சிந்திக்கத் தொடங்கினார்கள். 

 

New effort of young people to remove karuvelam trees

 

 

இதையடுத்து ஒரு சீமைக் கருவேலங்கன்றை வேரோடு பிடுங்கி வந்து கொடுத்தால் ரூ. 3 பரிசு கொடுக்கப்படும் என்று  புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். அடுத்த நாள் முதல் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் தமக்கு அருகில் உள்ள சீமைக் கருவேலங்கன்றுகளை பிடுங்கிக் கொண்டு வந்தனர். அதற்கான சன்மானம் அவர்களுக்கு வழங்கப்பட்டதை அடுத்து மேலும் உற்சாகத்தோடு கிளம்பினார்கள். இப்போது ஊரெங்கும் சென்று சீமைக் கருவேலங்கன்றுகளை பறிக்க தொடங்கிவிட்டனர். மாலை பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்ததும் சீமைக் கருவேல மரக்கன்றுகளை பிடுங்க பட்டாளமாக கிளம்பிவிடுகின்றனர். இதனால் கடந்த சில நாட்களில்  கொத்தமங்கலம் கிராமத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் சீமைக் கருவேல மரக்கன்றுகளை பிடுங்கி வந்து கொடுத்து பணத்தை பெற்றுச் சென்றுள்ளனர்.

 

New effort of young people to remove karuvelam trees

 

 

இளைஞர்களும், மாணவர்களும். வேரோடு பிடிங்கி வரப்பட்ட கன்றுகளை தீ வைத்து எரித்து அழித்து வருகின்றனர் இளைஞர்கள். பனை மரக்காதலர்கள் மறு பக்கம் பெரிய கருவேல மரங்களை வெட்டி அகற்றிவிட்டு மீண்டும் துளிர்க்காமல் பெருங்காயம் வைத்து மண்எண்ணெய் ஊற்றி அழித்து வருகிறார்கள். கொத்தமங்கலத்தில் சீமைக் கருவேல மரக்கன்றுகளை அழிக்க இப்படி ஒரு திட்டத்தை அறிவித்து சிறப்பாக செயல்படுவதைப் பார்த்த பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதியில் நீர்நிலைகளை சீரமைத்து வரும் கைஃபா  அமைப்பினர் பேராவூரணிப் பகுதியில் சீமைக் கருவேல மரக்கன்றுகளை வேரோடு பிடுங்கி வந்து கொடுத்தால் ரூ. 5 பரிசு என்று அறிவித்துள்ளனர். சபாஷ் சரியான போட்டி.. இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் புறப்பட்டால் சில மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேலமரங்கள் இல்லாத தமிழகமாக மாற்ற முடியும். வறட்சியையும் போக்க முடியும். 

சார்ந்த செய்திகள்