கல்ப கோடிகாலத்திற்கு முன்பாக சைவம் பெரிதா, வைணவம் பெரிதா? யார் பெரியவர் என்ற ஈகோ காரணமாக இரு தரப்பினரும் மோதிக் கொண்டார்கள், ரத்தமும் சதையுமாகப் இருதரப்பிலும் பலர் பலியானவர்கள். பூலோகம் அமைதியிழந்து அல்லல்பட்டது. தேவாதி தேவர்கள் எல்லோரும், பூலோக மக்களைக் காப்பற்றும்படி ஆதிசிவன் சர்வேஸ்வரனிடம் வேண்டி நின்றனர்.
பூலோக அமைதிக்காக ஆதிக்கடவுள் சிவபெருமாள் தன் உடம்பில் வலது பாகம் சிவனாகவும் இடதுபாகம் திருமாலாகவும், ஒரு சேர உருவெடுத்து சங்கரநாரயணராகப் பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். சிவனும் விஷ்ணுவும் ஒன்றே, அதே போன்று சைவமும் வைணமும் ஒன்றுதான் என்றுணர்த்தி இரு தரப்பினருக்குள்ளும் ஒற்றுமையை ஏற்படுத்தினார். பக்தர்களுக்குக் காட்சியளித்த அத்திருமேனியை, அடியவளுக்கும் காட்டியருள வேண்டும் என்று அன்னை உமாதேவியார், காக்கும் கடவுள் சிவபெருமானிடம் வேண்டி நின்றார்.
பூலோகத்தில் அகத்திய முனிவர் இருக்கும் பொதிகை மலைப்பக்கம், புன்னைவள விருட்ஷமிருப்பதில் நீ தவம் செய்வாயானால் நீ விரும்பிய திரு உருவைக்காட்டுவோம் என்று திருவாக்கருளினார். ஆதிசிவனின் ஆக்ஞைப்படி அன்னையார் புன்னனையடியில் நெடுங்காலம் தவமிருக்க, அவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் ஆடிப் பௌர்ணமியின் போது உமையவள் பார்வதிதேவியாருக்கு சங்கரநாராயணராகத் திருக்காட்சியருளினார். படைக்கும் கடவுளின் இந்த அரிய காட்சி வைபவம் நடந்தேறிய புன்னையடிப் பகுதிதான் தற்போது நெல்லை மாவட்டத்தில் வரும் சங்கரன்கோவிலாகும்.
தன் இஷ்ட தெய்வமான சங்கர நாராயணர், ஸ்ரீ கோமதியம்பிகைக்கு சங்கரன்கோவிலில் மிகப்பெரிய ஆலயமாக 900 ஆண்டுகட்கு முன்பு உக்கிர பாண்டிய மன்னரால் அமைக்கப்பட்டதாக வரலாறு பேசுகிறது. ஆடிமாதத்தில் நடந்த இத்திருக்காட்சியே ஆடித்தபசாக வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நகரின் 11 நாட்கள் மண்டகப்படி திருவிழாவாக நடத்தப்பட்டு 10ம் திருநாளான இன்று ஆடித்தபசுக் காட்சி.
நேற்று காலை மூலஸ்தானமாகிய சங்கரலிங்க சுவாமி கோமதியம்பாளுக்கு கும்பம் அபிஷேகம் காலை 5 மணிக்கு நடந்தது. பின்பு காலை 9 மணியளவில், சுவாமி, அம்பாளுக்கும், சந்திர மவுலீஸ்வரருக்கும் கும்பம் அபிசேகம் அலங்காரம். பரிவட்டம். திருக்கண்.
மாலை 4.30 மணி அளவில் சங்கரநாராயண சுவாமி தபசுக்காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினார். லட்சக்கணக்கான மக்கள் திரள “அரகர மகாதேவா” என பக்தர்கள் பக்திப் பரவசக்குரலெழுப்ப தவக்கோலத்திலிருந்த அன்னை பார்வதி தேவியாருக்கு அத்திருமேனியான சங்கரநாராயணராக திருக்காட்சி காட்சியளித்து அருளினார் ஆதி சிவபெருமான்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்ட எஸ்.பி.அருண்சக்திகுமாரின் நேரடிக் கண்காணிப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.