கோவை அருகே தமிழக-கேரள எல்லையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு நின்று கொண்டிருக்கும் யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என்பது தொடர்பாக குழப்பம் நீடித்து வருகிறது.
கோவையின் ஆனைக்கட்டி பகுதி தமிழக - கேரள எல்லைக்கு இடைப்பட்ட பகுதியாக இருக்கிறது. இந்த பகுதியில் சில மலை கிராமங்களும் உள்ள நிலையில் கோவை ஆனைக்கட்டி பட்டிச்சாலை பகுதியில் காட்டு யானை ஒன்று இரண்டு நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்படுகிறது. இதனால் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் தமிழக எல்லையில் இருக்கும் அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பது கேரள வனத்துறையா? தமிழக வனத்துறையா? என்ற குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் கோவை ஆனைக்கட்டி பட்டிச்சாலை பகுதியில் இருந்த யானை தற்போது தாசனூர்மேடு பகுதிக்கு சென்றுள்ளது. அந்த பகுதி கேரளாவின் அட்டப்பாடி வனத்துறையின் கீழ் இருப்பதால் யானைக்கு சிகிச்சை தர கேரள வனத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியாசாகு விளக்கமளித்துள்ளார்.