தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனவும், தவறாக மொழி பெயர்க்கப்பட்ட 68 கேள்விகளுக்கு மத்திய கல்வி வாரியம் "கிரேஸ்" மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டபோது மத்திய அரசு தரப்பில் சொன்னது எதுவும் நடக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், ஜி.எஸ்.டியால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும், 40 சதவீத தொழில்கள் மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் திருப்பூரில் 26 ஆயிரம் கோடியாக இருந்த பனியன் ஏற்றுமதி 23 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது எனவும், 3000 கோடி வரை ஏற்றுமதி குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நிலவும் தொழில் பிரச்சினையை கவனிக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்த அவர், தொழில் அமைப்புகள் வநடத்தும் போராட்டத்திற்கு தங்கள் கட்சி ஆதரவளிக்கும் எனவும் தெரிவித்தார்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்யவில்லை என குற்றம் சாட்டிய அவர், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெரும் அநீதி ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கேள்வித்தாளில் மொழியாக்கம் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், 68 கேள்விகள் பிழையாக கொடுக்கப்பட்டு இருக்கின்றது எனவும், இதை சரியாக புரிந்து மாணவர்கள் தேர்வு எழுதி இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மத்திய கல்வி வாரியம் "கிரேஸ்" மார்க் வழங்க வேண்டும் எனவும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.