Skip to main content

ஏ.கே.ராஜன் குழு அமைத்ததை எதிர்த்து பா.ஜ.க. வழக்கு!

Published on 28/06/2021 | Edited on 28/06/2021

 

neet exam committee bjp chennai high court

 

நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை எதிர்த்து பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

 

அந்த மனுவில், "நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்திற்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது. உச்சநீதிமன்ற உத்தரவு, தேசிய நலன் ஆகியவற்றின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மருத்துவக் கல்வியை மேம்படுத்த மருத்துவ ஆணையத்திடம் மட்டுமே ஆலோசனைகளைத் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு இதை அரசியலாக்கக் கூடாது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க ஏதுவாக உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பட்டப்பகலில் கட்டி வைத்துத் தாக்குதல்; நிலைகுலைந்த பெண் - பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 woman and a man were tied up and beaten in public in West Bengal

மேற்கு வங்கம் மாநிலத்தில் பொதுவெளியில் ஒரு பெண்ணையும், ஆணையும் கட்டி வைத்து தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கம் மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துவருவதால், பாஜகவினர் இந்த வீடியோவை பகிர்ந்து கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்தச் சம்பவம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ராவில் நடந்துள்ளது. வீடியோவில், ஒரு ஆணையும், பெண்னையும் மூங்கில் கம்பால் சரமாரியாக ஒருவர் தாக்குகிறார். அதனைப் பொதுமக்கள் தடுக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துகொண்டும், செல்போனில் படம் பிடித்துக்கொண்டு உள்ளனர். அடி தாங்க முடியாமல் பெண் நிலைகுலைந்து போயுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இருவர் மீதும் தாக்குதல் நடத்தியவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தாஜேமுல் என்று அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலா செயலாளர் தெரிவித்துள்ளார். வீடியோவில் தாக்கப்படும் ஆணும், பெண்ணும் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், கட்டபஞ்சாயத்து அடிப்படையில் இருவருக்கும் பிரம்படி தண்டனை கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த இஸ்லாம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாஜேமுல் சோப்ரா தொகுதி திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹமிதுர் ரஹ்மானுக்கு நொருக்கமானவர் என்று குற்றம் சாட்டிய பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தகவல் தொழில்நுட்ப தலைவர் அமித் மாளவியா, “மம்தா தலைமையிலான அரசில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. மம்தா பெண்களின் சாபக்கேடு. தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு; குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
NEET exam question paper leak School owner arrested in Gujarat

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் முறைகேடு தொடர்ந்து எதிரொலித்து வரும் நிலையில் சிபிஐ விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளர் தீக்சித் படேலை சிபிஐ கைது செய்துள்ளது. இவரது பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஜார்க்கண்டில்  உள்ள பள்ளி ஒன்றின் முதல்வர் அசானுல் ஹக், அப்பள்ளியின் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை சிபிஐ கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.