Skip to main content

நாம் தமிழர் - மதிமுக கட்சியினர் இடையே கடும் மோதல்! - திருச்சியில் பரபரப்பு!

Published on 19/05/2018 | Edited on 19/05/2018
nam s


கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை நடைபெற உள்ள விழாவிற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகிய இருவரும் சென்னையில் இருந்து திருச்சிக்கு ஒரே விமானத்தில் வந்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் வரவேற்க இரு அணியின் தொண்டர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்துள்ளனர். இந்நிலையில், முதலில் வைகோ விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரவே சீமான் விமான நிலைய ஓய்வு அறையில் காத்திருந்துள்ளார்.

இந்த இரு கட்சியினருக்கும் இடையே சமீப காலமாக கடுமையான முன்னவிரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், முதலில் வந்த வைகோ விமான நிலைய வாயிலில் செய்தியாளர்களை சந்தித்து விட்டு புறப்பட இருந்த நேரத்தில் சீமானை அழைத்து செல்ல வந்த கார் ஓட்டுநர் வைகோவை சீக்கிரம் பேசிட்டு கிளம்ப சொல்லுமாறு நக்கலாக கூறியுள்ளார். இதில் கடுப்பான மதிமுகவினர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வாக்குவாதம் முற்றவே திடீரென இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளில் வைத்திருந்த கொடிகளால் கடுமையாக தாக்கி கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சீமான் மோதல் முடியட்டும் பின்னர் வருகிறேன் என விமான நிலைய ஓய்வு அறையில் மோதல் முடியும் வரை காத்திருந்துள்ளார்.

கிட்டதட்ட 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த மோதலை தடுக்க காவல்துறையினர் முன்வரவில்லை என கூறப்படுகிறது. இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கரிகாலன் என்பவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து, மயங்கி விழுந்த கரிகாலன் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோதல் சம்பவம் முடிந்த தகவல் அறிந்த பின் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சீமானை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அப்போது அவரிடம் மோதல் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், இப்போது தான் வருகிறேன். எதுவும் தெரியாது. என்ன நடந்தது என்று கேட்கிறேன் என பதில் கூறிவிட்ட அங்கிருந்து சென்று விட்டார்.

இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால், திருச்சி விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்