Skip to main content

பழனிசாமியை சந்தித்த நாகூர் தர்கா நிர்வாகிகள் அதிரடி நீக்கம்...

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

Nagore Dargah executives who met Palanichamy were dismissed

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சட்டமன்றத் தேர்தலுக்கு ஆதரவு அளித்த இஸ்லாமிய அமைப்பினருக்கு நாகூர் சாஹிப் மார்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வரை சந்தித்தவர்களைப் பொறுப்பில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 

உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் முன்னாள் தலைவர் காமில் சாஹிப், அவரது மகன் செய்யது முகமது கலீபா சாஹிப், ஹாஜ் வாப்பா ஆகிய மூன்று பேர் நாகூர் தர்கா சாஹிப்மார்கள் சங்கம் சார்பில் நேற்று (09.03.2021) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். சாஹிப்மார்கள் சங்கத்தின் அனுமதியின்றி தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவு, நாகூரில் உள்ள சாஹிப்மார்களிடையே பெரும் கோபம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

இதையடுத்து இன்று நாகூரில் அவசர அவசரமாக கூடிய நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் சங்கம், நாகூர் தர்கா சாஹிப்மார்கள் முன்னேற்ற சங்கம், தமிழக தர்காக்கள் பேரவைகள் என அனைத்து அமைப்புகளின் சார்பிலும் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், தன்னிச்சையாக முடிவெடுத்து அதிமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்த நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப்பை அந்த பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். அதோடு அதிமுகவிற்கு ஆதரவு அளித்த நாகூர் தர்கா முன்னாள் நிர்வாகிகள் மூன்று பேருக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

 

Nagore Dargah executives who met Palanichamy were dismissed

 

இதைப் பற்றி தர்கா சாஹிப்மார்கள் கூறுகையில், “அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருப்பதால், இஸ்லாமிய மக்களின் ஆதரவு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு மட்டுமே. தன்னிச்சையாக காசுக்காக ஒருசிலர் நாகூர் தர்காவின் நிர்வாகமே தங்களிடம்தான் இருக்கிறது போல் எண்ணி பேசி இருக்கின்றனர். மேலும் இஸ்லாமியர்களின் வாக்குகள் அவர்கள் வசமே இருப்பதுபோல ஒரு பிம்பத்தை உருவாக்குவதற்கு அதிமுகவிற்கு ஆதரவு அளித்திருப்பது அட்டக்கத்தியை நம்பி போர்க்களத்தில் குதிப்பதற்கு சமமானது. எங்களது வாக்கு பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு கிடையாது” என்று உறுதிபட கூறுகின்றனர். 

 

இதுகுறித்து நாகை அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம், “சில மாதங்களுக்கு முன்பு நாகை வந்திருந்த எடப்பாடி பழனிசாமியை நாகூர் தர்காவிற்கு சொந்தமான குளத்தின் கரை இடிந்திருந்ததைப் பார்வையிட அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் முயற்சியால் அழைத்துவந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு நாகூரில் சிறப்பான வரவேற்பு வழங்கி கவுரவித்தனர். இடிபாடுகளைப் பார்வையிட்டவர், உடனடியாக செய்து தருவதாக கூறிவிட்டு சென்றார். அப்போது அறிமுகமானதை சாதகமாக்கிக்கொண்ட அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தர்காவின் முன்னாள் பொறுப்பாளர்களை அழைத்துச்சென்று, பரஸ்பரம் ஏற்படுத்திக்கொண்டு பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும் சந்திக்க செய்து இஸ்லாமியர்களின் ஆதரவு எங்களுக்கும் இருக்கிறது என்பதை வெகுஜனமக்களுக்கு சொல்லும்விதமாக செய்துள்ளனர். அதிமுக, பாஜகவோடு கூட்டணி வைத்த நொடிமுதலே இஸ்லாமியர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது முடிவாகிவிட்டது. இதுபோன்ற நாடகம் நடத்துவதனால் எதுவும் அதிமுகவிற்கு சாதகமாகிவிடாது” என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்