Skip to main content

பாஜக மீதான தம்பிதுரையின் விமர்சனம் - முரளிதரராவ் விளக்கம்

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
ra

 

பாஜக தலைமையிலான மத்திய அரசு குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரையின் பேச்சு அதிமுகவின் பிரச்னை என பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

 


கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகே உள்ள இந்திய தொழில் வரத்தக சபையின் அலுவலகத்தில் கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஜவுளித் துறையினரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜகவில் இணைந்துள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். 

 

விழாவில், ஜவுளித்துறையினர் தங்களது கோரிக்கைகளை விளக்கியதுடன், மனுவாகவும் அளித்தனர். அப்போது பேசிய பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ், தொழில் முனைவோர்கள் தான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் என்றும், அதில் தனியார் துறை மற்றும் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பது அவசியமானது என்றவர், 2019 தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தயாரிக்கவுள்ள  குறும்படத்திற்காக பாரத் மன்கீ பாத் மோடி கே சாத் நிகழ்ச்சி மூலம்   பல்வேறு துறைகளை சேர்ந்த காஷ்மீர் முதல் கன்னியாகுமரி, அருணாச்சலம் முதல் குஜராத் வரையிலான 10 கோடி மக்களிடம் தகவல்களை பெற முனைந்துள்ளதாகவும், இந்நிகழ்ச்சிக்காக அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் உட்பட பல தலைவர்கள் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். 

 

பாஜக ஒரு குடும்பத்தை சார்ந்தவர்கள் இல்லை என்று காங்கிரசை மறைமுகமாக சாடியவர்,  
மோடி மாநில அரசுக்கு அறிவுரை வழங்கினால், மாநில அரசு மோடி அரசுக்கு துணை நிற்க மாட்டார்கள் என்பதால்  மோடிக்கு தனி வலிமையை வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கினால் 360 டிகிரி வளர்ச்சி இருக்கும் என்றார்.

 


 பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தவர், விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு வழங்கும் ஜவுளித்துறையில் இந்தியாவிலேயே  கோவை, திருப்பூர், கரூர் ஆகிய பகுதிகள் முக்கியமானவை என்றும், மக்களுடன் மோடிக்கான தொடர்பு அதிகரித்திருப்பதால் தமிழகத்தில் மக்களிடையே பாஜகவிற்கான ஆதரவு பெருகி உள்ளதாக தெரிவித்தார். நட்பான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், வளர்ச்சி மற்றும் நேர்மறையான அரசியல் வழங்கும் வகையில் பாஜக தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்படும் என்றவர், தம்பிதுரை பேச்சு அதிமுக தலைமையிலிருந்து வரவில்லை என்றும், கூட்டணியைப் பொருத்தவரை எந்த கட்சியிடனும் பிரச்னை இல்லாமல் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்,  விரைவில் கூட்டணி அறிவிக்கப்படும் என்றார்.


 

சார்ந்த செய்திகள்