தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பரபரப்பாக வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள்.
அதேபோல் பல்வேறு பகுதிகளிலும் ஒரே குடும்பத்தினர் போட்டியிடுவது, இளம் வயதினர் போட்டியிடுவது, வயதில் மூத்தவர்கள் போட்டியிடுவது உள்ளிட்ட செய்திகள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் மாமியார்-மருமகள் இருவேறு கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.
அதிமுக சார்பாக ரேகா சதீஷ்குமார் 10வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல் ரேகாவின் மாமியார் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பாக ஒன்றாவது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார்-மருமகள் இருவேறு கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுவது அப்பகுதி வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.