Skip to main content

பொட்டலத்திலிருந்ததை பகிர்ந்து சாப்பிட்ட குழந்தைகள்...அரசு மருத்துவமனையில் குவிந்த 500க்கும் மேற்பட்டவர்கள்!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

More than 500 people gathered at the government hospital

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அருகிலுள்ளது நல்லாத்தூர் கிராமம். இங்குள்ள காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கயல், ராசுகுட்டி, சிவமணி, இளமதி, காயத்திரி உட்பட ஐந்து ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண்குழந்தைகள். இவர்கள் 8 பேரும் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தெருவோரம் விளையாடிக்கொண்டிருந்தனர். அந்தப் பகுதியில் விஷ மருந்து பொட்டலம் ஒன்று கிடந்துள்ளது (பொட்டாசியம் மாங்கனெட் ). அதை எடுத்து பிரித்து பார்த்துள்ளனர்.

 

அது வெள்ளை நிறத்தில் இருந்ததால் இனிப்பான தின்பண்டம் அதை யாரோ தவறி வழியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர் என்று எண்ணி மேற்படி எட்டு குழந்தைகளும் அந்தப் பொட்டத்திலிருந்ததை ஆளுக்கு கொஞ்சமாக பகிர்ந்து சாப்பிட்டுள்ளனர். அதைத் தின்ற சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரது வயிறும் எரிச்சல் கண்டு கதறி அழுதுள்ளனர். இந்தத் தகவல் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு தெரியவரவே அவர்கள் குழந்தைகள் அனைவரையும் ஒரு வாகனத்தில் ஏற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். குழந்தைகளுக்கு அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊர் மக்கள் மற்றும் குழந்தைகளின் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இந்த சம்பவம் குறித்து கச்சராபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் விளையாடிக்கொண்டிருந்த இடத்தில் கிடந்த விஷ மருந்து பொட்டலம் ஆகியவற்றை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரம் கிடந்த பொட்டலத்தை தின்பண்டம் என்று எடுத்து குழந்தைகள் சாப்பிட்டதால் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.