Skip to main content

’ கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொறியத்துவங்கிவிட்டார்கள்’; மக்கள் அதிகாரம் காளியப்பன் சாடல்

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

 

"கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொறியத் தொடங்கிவிட்டார்கள் வட இந்திய வாக்காளர்கள். கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு ஏற்படுத்திய நாசத்திலிருந்து விடுபட முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள் மோடிக்கு மீண்டும் அதிகாரத்தை எப்படி கொடுத்தார்கள் என்பதற்கான காரணங்கள் மிகவும் ஆபத்தானவை."என்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளரும், எழுத்தாளருமான காளியப்பன்.

 

அவர் மேலும்," பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பொருளாதாரத் தாக்குதலைக் காட்டிலும் இந்த நாட்டின் பன்முகத்தன்மை, மதசார்பின்மை, கருத்துச்சுதந்திரம், சிறுபான்மையினர், தலித் மக்களின் உரிமைகள் மீதான தாக்குதல்கள், படுகொலைகள் ஆகியவற்றிற்குப் பிறகும் மோடிக்கு முன்னைவிட அதிக இடங்கள் கிடைத்திருக்கின்றன என்றால் வட இந்திய சமூகம் மொத்தமும் ஜனநாயக உணர்வை இழந்து சாதிவெறி, மதவெறி,போலி தேசவெறி, முடைநாற்றம் வீசும் மூடத்தனங்கள், பிற்போக்குத்தனங்கள் ஆகியவற்றில்  மூழ்கிக்கிடப்பது முக்கியமான காரணம் என்பது மறுக்க முடியாதது. 

 

k


 
இதற்கு நேர் மாறாக கர்நாடகம் தவிர்த்த தென்னிந்தியா, அதிலும் குறிப்பாகத் தமிழகமும் கேரளமும் பாஜகவை அவமானகரமான முறையில் விரட்டியடித்திருக்கின்றன. தற்போது பாஜக பெற்றிருக்கும் மிருக பலம் ஏற்படுத்தப்போகும் அழிவுகள் மிகக் கொடியனவாக இருக்கப் போகின்றன. சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள், தலித்துகள் ஆர்.எஸ்.எஸ் கும்பலின்பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள். உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக செயல்படுவோரை தேச விரோதிகளாகச் சித்தரித்து பேராசிரியர் சாய்பாபா, கவிஞர் வரவர ராவ் போன்றோரை சிறையில் தள்ளியிருக்கும் மோடி அரசு, தேச விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டங்களை மிகக்கடுமையாக்கப் போவதாக தேர்தலுக்கு முன்பே அறிவித்து விட்டது. 

 

கடந்த அய்ந்தாண்டுகளில் அதிகார வர்க்கம், நீதிதுறையை பெருமளவு ஆர் எஸ் எஸ் மயமாக்கி, பாசிசத்திற்கு அடித்தளமிட்டுவிட்டது மோடி அரசு. எனவே பாசிச ஒடுக்கு முறையை ஏவ பாஜக முன்னரே தயாராகி விட்டது. முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த பனகாரிகா, வரப்போகும் அரசு தற்போது இருக்கும் அரசு துறைகள் அனைத்தையும் தனியார் மயமாக்க வேண்டும் என எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றி இருக்கிறார். 


 
உலகம் முழுவதும் முதலாளித்துவம் சந்தித்து வரும் நெருக்கடிகளின் தாக்கம் இந்தியாவில் மேலும் அதிகரிக்கவே செய்யும். விவசாயம், சிறு தொழில், சிறு வணிகம் இவற்றின் நசிவு, வேலையின்மை ஆகியவற்றால் ஏற்படப்போகும் சமூகக் கொந்தளிப்பை மோடி அரசு பாசிச அடக்குமுறையின் மூலம் மட்டுமே எதிர்கொள்ளும்.   இந்த நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயக பூர்வமான தேர்தலுமல்ல, ஜனநாயகத்திற்கான தேர்தலுமல்ல. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு யார் கையாளாக இருப்பது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல். பாசிஸ்டுகளை தேர்தல் மூலமாக வீழ்த்த முடியாது என்பதை தெளிவுபடுத்தியிருக்கும் தேர்தல் இது.


 
தென்னிந்தியாவை வட இந்தியா ஒருகாலும் வெற்றி கொள்ள முடியாது என்றார் புரட்சியாளர், அம்பேத்கர்.  அந்த வகையில் பகுத்தறிவு, மதசார்பின்மை, அரசியல் விழிப்புணர்வு போன்றவற்றில் முன்னணியில் இருக்கும் தமிழகம் பாஜகவின் பாசிசத்தை வீழ்த்தும் போராட்டத்தில் முன் நிற்க வேண்டும். ஜனநாயக சக்திகளும், அறிவுத்துறையினரும், புரட்சிகர இயக்கங்களும் ஓரணியில் திரண்டு வரப்போகும் பாசிச அபாயத்தை முறியடிக்க வேண்டும். மக்கள் சக்திக்கு முன்னால் கொடிய ஹிட்லரும், முசோலினியும் மண்ணாகிப்போன வரலாற்றை இந்தியாவிலும் நமது மக்கள் படைப்பர்கள்."என்றார் அவர்.
 

சார்ந்த செய்திகள்