மாணவர்-பெற்றோர் இருவருக்கும் மன உளைச்சல் தந்து மரணத்திற்கு அவர்களைத் தள்ளும் இந்தக் கொடிய யுக்தியால்தான் பலியானார் பண்ருட்டி சீனிவாசன். அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி; அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசைக் கோருகிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மருத்துவப் படிப்பில் சேர்வதற்குத் தேவையான மதிப்பெண்களை விட அதிகம் எடுத்திருந்தும், அதில் சேரவிடாமல் தடுத்த நீட் நுழைவுத் தேர்வால் கடந்த ஆண்டு மாணவி அனிதா உயிரிழந்தார். இந்த ஆண்டு வேண்டுமென்றே தொலைதூர மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைத்துப் பழிவாங்கியது நீட்!
நீட் தேர்வு எழுதும் தன் மகன் கஸ்தூரி மகாலிங்கத்திற்கு துணையாகச் சென்றிருந்த திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மரடைப்பால் மரணமடைந்தார். மதுரை பசுமலை நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய தன் மகள் ஐஸ்வர்யாவை அழைத்துக்கொண்டு வீடு திரும்பிய சிங்கம்புணரி கண்ணணும் மாரடைப்பால் மரணமடைந்தார்.
புதுச்சேரியில் தேர்வெழுதிய மகள் சுவாதிக்காக தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்த பண்ருட்டி சீனிவாசனும் மாரடைப்பு ஏற்பட்டுதான் மரணமடைந்தார். மரணமடைந்த மூவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி; அவர்களின் குடும்பங்களுக்கு வேண்டிய இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகளை வழங்கக் கோருகிறது.
வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாமல் தமிழகத்தில் மாத்திரம் நீட்டால் மரணங்கள் அதுவும் தற்கொலை மற்றும் மாரடைப்பு மரணங்கள் ஏன்? தமிழினத்தை அழித்தொழிக்கும் மோடியின் மறைமுக மற்றும் வெளிப்படை திட்டங்களில், நீட் மறைமுகத் திட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது.
இப்படி நாம் குறிப்பிடுவதை மெய்ப்பிப்பதாக உள்ளன நாட்டு நடப்புகள். தேசிய மனித உரிமை ஆணையமே தானாக முன்வந்து கிருஷ்ணசாமி மரணமடைந்ததை விசாரிப்பதும், அதில் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கும் சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியிருப்பதும் நீட்டுக்கு எதிரான விறல்நீட்டலே ஆகும். நீட்டுக்கு எதிரான விறல்நீட்டல் மோடிக்கும் எதிரான விறல்நீட்டலே! இன அழிப்பிற்கு பாசிஸ்டுகள் தேர்வு செய்திருக்கும் நவீன யுக்திதான் இந்த நீட் தேர்வு!
மாணவர்-பெற்றோர் இருவருக்கும் மன உளைச்சல் தந்து மரணத்திற்கு அவர்களைத் தள்ளும் இந்தக் கொடிய யுக்தியால்தான் பலியானார் பண்ருட்டி சீனிவாசன்! அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி; அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசைக் கோருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.