Skip to main content

ஊராட்சி நிதியில் முறைகேடு? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

Misappropriation of panchayat funds? Order of the Collector to conduct an inquiry

 

தேனி மாவட்டம், கம்பம் அருகே இருக்கும் சுருளிப்பட்டி கிராம ஊராட்சியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 11 பேர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் ஊராட்சி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது, ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.

 

அந்த மனுவுடன் ஊராட்சி வரவு செலவுப் பட்டியலின் நகலையும் சமர்ப்பித்தனர். அந்த பட்டியலில் அதிகாரிகளின் ஆய்வின்போது அவர்களின் உறவினர்களுக்கு செலவு செய்தது உள்பட பல்வேறு பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றன. ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி ஒருவரின் உறவினர்கள் கம்பத்தில், ஒரு சொகுசு விடுதியில் தங்கியதற்காக 34 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று வாகனங்களுக்கு தரச்சான்று வாங்கியது தொடர்பாக வாகன டிரைவர்களுக்கு செய்த செலவு, ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் ஆய்வின் போது அவர்களுடன் வந்த ஒரு அதிகாரியின் டிரைவர்களுக்கு கொடுத்தது என விதவிதமான செலவுகள் அந்தப் பட்டியலில் இடம் பெற்று இருந்தன. 


இதைப் பார்த்த ஆட்சியர் முரளிதரன் அதிர்ச்சி அடைந்தார். அதைத் தொடர்ந்து அந்த புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியனுக்கு ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.


இது சம்பந்தமாக ஆட்சியர் முரளிதரனிடம் கேட்டபோது, “ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கொடுத்த புகாரில் ஊரக வளர்ச்சி முகமை துறை சார்ந்த அலுவலர்களை குறிப்பிட்டுள்ளதால் வருவாய்த்துறை அலுவலர்  மூலம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்திய பின் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்