அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் இருந்து வருகிறார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக புழல் சிறையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூடுதல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு அன்று மாலையே மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.