Skip to main content

காட்டுக்குள் "சிறுத்தை புலி" யை தேடிச்சென்ற அமைச்சர்...!!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

கடையை ரிப்பன் வெட்டி தொடங்கி வைப்பதும், சாலை அமைக்க கடப்பாரை மண்வெட்டியை கையில் பிடிப்பதும், பயனாளிகளுக்கு இலவச பொருட்கள் கொடுத்து போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பது மட்டும் அமைச்சர் வேலையில்லை. அடர்ந்த காட்டுக்குள் சென்றும் நாங்கள் போட்டோ எடுத்து வெளியிடுவமே என்று காட்டியிருக்கிறார் சீனியர் அமைச்சர் ஒருவர்.

அவர் வேறு யாருமில்லை அமைச்சர் செங்கோட்டையன் தான்.

 

Minister searches for "leopard" in forest

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை ஒட்டி இருக்கிறது தூக்கநாயக்கன்பாளையம் வனப்பகுதி. இங்கு உள்ள கொளஞ்சியம் என்ற காட்டுப்பகுதியில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விவசாயம் செய்து வருவதோடு கால்நடைகள் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இந்த வனப்பகுதிக்குள் சுற்றிவரும் ஒரு சிறுத்தை புலி விவசாயிகளான மணி, குமார், பீட்டர் ஆகியோரின் விவசாய விளைநிலத்தில் புகுந்து அங்கு கட்டிவைத்திருந்த பசுமாடு மற்றும் ஆட்டுக்குட்டிகளை கடித்துக் ஆட்டுக்குட்டியை கடித்துக் கொன்றதோடு அவைகளை சாப்பிட்டுவிட்டு சென்றது. 

இதை தடுக்க சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க விவசாயிகள் வனத்துறையினருக்கு வேண்டுகோள் வைத்திருந்தனர். வனத்துறையும் அப்பகுதியில் உள்ள வாழைத்தோப்புகளில் தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். இந்த தகவலை கேள்விப்பட்ட அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை தொகுதியில் சில நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு வாங்க அப்படியே காட்டுக்குப் போகலாம் என கட்சிகாரர்களிடம் கூறியுள்ளார். 

 

Minister searches for "leopard" in forest

 

காட்டுக்கா எதுக்குங்க என எப்போதும் உடன் செல்லும் கட்சிக்காரர்கள் பீதியுடன் கேட்க, ஏப்பா நம்ம தொகுதி மக்களுக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அதை நேரில் போய் பார்க்க வேண்டாமா? தூக்கநாயக்கன்பாளையம் காட்டுப்பகுதியில் சிறுத்தை புலி நடமாடுது அதனால விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக சொல்றாங்க, நாம் நேரில் போய் பார்த்துட்டு வருவோம், சிறுத்தைப்புலி அங்கிருந்தா நாமும் நேரிலே பார்ப்போமே என செங்கோட்டையன் சிரித்துக் கொண்டே கூற சில கட்சிக்காரர்கள் எங்களுக்கு வேறு நிகழ்ச்சியிருக்கிறது என நைசாக நழுவி கொண்டனர்.

சிலர் தைரியமாக செங்கோட்டையனுடன்  புறப்பட்டனர். இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பாதுகாப்பாக செங்கோட்டையன வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று வாழைத்தோப்பு காட்டுப் பகுதிகளை பார்வையிட வைத்தனர் வனத்துறையினர். அந்த பகுதியில் எவ்வளவு தூரம் பார்த்தும் சிறுத்தை புலியை அமைச்சர் செங்கோட்டையன் பார்க்காமலேயே திரும்பிவிட்டார். ஆனால் வனப்பகுதிக்குள் செங்கோட்டையன் நடந்துசென்று பார்வையிடுவது புகைப்படமாக வெளியிட்டு சிறுத்தை புலி காட்டுக்கே செங்கோட்டையன் பயம் இல்லாமல் சென்று வந்தார் என அறிவிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்