Skip to main content

தமிழகத்தில் முதல்முறையாக மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்!

Published on 08/11/2024 | Edited on 08/11/2024
minister launched the Electronic Crop Cultivation Survey project

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கருங்குழியில் வேளாண் துறை சார்பில்  மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு திட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார்.  கடலூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் வரவேற்று பேசினார்.  திருச்சி ஓமலூர் வேளாண் கல்வி நிலையம் முதல்வர் சிவக்குமார் திட்ட விளக்க உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அப்பகுதியில் உள்ள நெல் வயலுக்கு சென்று மின்னணு கணக்கெடுப்பைத் துவக்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், “வள்ளலார் தண்ணீரால் விளக்கேற்றிய வரலாற்று சிறப்புமிக்க ஊரில் விவசாயிகளுக்கு மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு  திட்டத்தை தமிழகத்தில் முதல் முறையாக  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண் பல்கலைக்கழகத்தின் குமலூர் வேளாண் கல்லூரியில் பயிலும் பட்டய பயிற்சி மாணவ மாணவிகள் விவசாயிகளுடன் தங்கி மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள உள்ளார்கள். இவர்களை விவசாயிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்ட இடங்கள் விவசாயிகளுக்கு கிடைப்பதில் சில காலதாமதம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டவர்களை சந்திக்கும் நிலைமை ஏற்பட்டதால் விவசாயிகளுக்கு உடனடியாக அடங்கல் கிடைப்பதற்காக கூட்டு முயற்சியாகும். விவசாயிகள் அரசின் நலத்திட்ட பலன்களை பெறுவதற்கும், பல்வேறு நிறுவனங்களில் கடனுதவி பெற்றிடவும் விவசாயிகளின் நில உடைமை தொடர்பான விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்றவற்றை பல்வேறு துறைகளுக்கு ஒவ்வொரு முறையும் விவசாயிகள் தனித்தனியே வழங்கிட வேண்டிய நிலை உள்ளது.

minister launched the Electronic Crop Cultivation Survey project

இது தொடர்பாக அனைத்து நில விவரங்கள் மற்றும் பயிர் சாகுபடி விவரங்கள் ஆகியவற்றை மின்னணு முறையில் சேகரித்து அவ்வப்போது புதுப்பித்து அவற்றை பல்வேறு துறைகளும் விவசாயிகளின் நில உடமை மற்றும் சாகுபடி செய்திருக்கும் பயிர் விவரம் போன்ற தகவல்களை பகிர்ந்திட ஏதுவாக இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இது ஊர் கூடித் தேர் இழுக்கும் பணியாகும். எனவே இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வடலூர் ஒரு நாள் கடலூர் ஆகும் என அப்போதே வள்ளலார் எழுதி வைத்துள்ளார். அதன் அடிப்படையில் தற்போது சென்னை அருகே உள்ள தாம்பரத்திற்கு உள்ள நகர் கட்டமைப்பு எப்படி உள்ளதோ அதே வசதியுடன் வடலூர் தற்போது திகழ்ந்து வருகிறது.  விவசாயிகள் பயிர் காப்பீடு தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும் . சில தனியார் உரக்கடைகளில் இணைப்பு உரம் வாங்கினால் தான் பயிர்களுக்கு தேவையான உரம் கொடுக்கப்படும் எனச் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வருகிறார்கள். அதனை கண்காணிக்க வேளாண்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது உடனடியாக சரி செய்யப்படும். தற்போது விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்கள் இருப்பு உள்ளது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  கடலூர் வேளாண்துறை துணை இயக்குனர் செல்வம் அனைவருக்கும் நன்றி கூறினார். முன்னதாக விவசாயிகளுக்கு வேளாண்  நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

சார்ந்த செய்திகள்