Skip to main content

“மேகதாது பற்றி பேசக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” - அமைச்சர் துரைமுருகன்

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

 minister duraimurugan says megathathu dam issue 

 

கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தமிழகத்திற்கு காவிரி நீரை தர முடியாது, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இவரின் இந்த கருத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இதையடுத்து காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி சென்று மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து மேகதாது விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேகதாதுவில் கர்நாடக அரசு சார்பில் அணை கட்டும் விவகாரம், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகா இடையே பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை ஜூன் மாதத்தில் கொடுக்கவில்லை. அதனால் காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். ஜூன் மாதம் தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் 2.833 டிஎம்சி தண்ணீரைத்தான் வழங்கியுள்ளனர். 6.357 டிஎம்சி அளவிற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் ஆணையத்திலும், காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்திலும் மேகதாது பற்றி பேசக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜல் சக்தி அமைச்சரும் இது பற்றி பேசக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்