Skip to main content

“தண்ணீர் திறந்தவர்களை 15 நாட்களுக்குள் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” - அமைச்சர் துரைமுருகன்

Published on 21/09/2024 | Edited on 21/09/2024
Minister Duraimurugan said  who opened water should be arrested and jailed within 15 days

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே குகைநல்லூர் என்ற இடத்தில் பொன்னை ஆற்றின் குறுக்கே புதிதாக ரூபாய் 12 கோடி 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் தான் அதிகமான தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது மக்களுக்கான திட்டங்களை அரசு உருவாக்கி வழங்குகிறது. அதனை மக்கள் தான் பாதுகாக்க வேண்டும். மாயனூரில் முதன்முதலாக அணை கட்டப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து அப்பகுதியில் வேளாண் பயிர்கள் செழித்து வருகிறது. அதைப்போலவே தற்பொழுது பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையானது. அதன் பலன் தண்ணீர் தேங்கி நிற்கும் போது தான் மக்களுக்கு தெரியும்.

இந்த அணையானது750 மீட்டர் நீளத்திற்குக் கட்டப்பட்டுள்ளது. மழை வெள்ளம் வரும்போது ஐந்து அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் சுமார் 716 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தற்பொழுது கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தேக்கி வைத்த தண்ணீரை சில காளிப் பயல்கள் நேற்று இரவு தண்ணீர் திறந்து விட்டுள்ளனர்.

தடுப்பணையில் தண்ணீரை தேக்கி வைக்க நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். ஆனால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே அணையைத் திறந்து தண்ணீரை வெளியேற்றிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 15 நாட்களுக்குள் அவர்கள் கைது செய்து தொரப்பாடியில் உள்ள வேலூர் சிறையில் அடைக்கப்படுவார்கள். காவல்துறை, மாவட்ட ஆட்சியர் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பணைகள் மக்களுடைய வரிப்பணத்தில் கட்டப்பட்டு வருகிறது. பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் என்பது பேச்சுவார்த்தைக்கு அல்ல சட்டத்தின் மூலம் பயம் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் குற்றங்கள் தடுக்க முடியும்” என்று கூறினார்.

மேலும் அணை கட்டப்பட்டு இருப்பதால் பலமாக இருக்கும் என்று நம்புகிறேன். இருந்த போதிலும் வெள்ளம் வரும்போதுதான் இதனுடைய உறுதித் தன்மை தெரிய வரும். அதிகம் வெள்ளம் வந்து தடுப்பணை சேதம் ஏற்பட்டால் தடுப்பணையைக் கட்டியவர்களும் சிறைக்குச் செல்வார்கள்” எனக் காட்டமாக பேசினார்.

சார்ந்த செய்திகள்