Skip to main content

பவாரியா கொள்ளையர்களுக்கு சற்றும் சளைக்காத மேவாட் கொள்ளையர்கள்... சென்னை ஏ.டி.எம் கொள்ளை மர்மம்! 

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

Mewat robbers tireless to Bahariya robbers ... Chennai ATM robbery mystery!

 

சென்னையில் எஸ்பிஐ டெபாசிட் செய்யும் இயந்திரங்களைத் தேர்வுசெய்து வடமாநில கொள்ளையர்கள் கடந்த மூன்று நாட்களாக பல லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் ஏடிஎம் கொள்ளைக்குப் பெயர்போன மேவாட் கொள்ளையர்களால் நிகழ்ந்ததுள்ளது மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

முன்னதாக, சென்னையில் நடைபெற்ற இந்தக் கொள்ளை தொடர்பாக 16 புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் முறையாக ஆவணங்கள் கொடுக்கப்பட்ட 7 புகார்களின் அடிப்படையில் 33 லட்சம் ரூபாய் என மொத்தம் 48 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

 

ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் 22.06.2021 அன்று 2 தனிப்படை ஹரியானா சென்று இதுதொடர்பாக ஒருவரைக் கைது செய்தனர். டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று தேசியக் கொள்ளையர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், 23ஆம் தேதி காலை சென்னை தி.நகர் துணை ஆணையர் ஹரிகரன் பிரசாத் தலைமையில் சென்ற போலீசார், ஹரியானா மாநிலத்தில் உள்ள அமீர் என்ற  கொள்ளையனைக் கைது செய்தனர். 

 

Mewat robbers tireless to Bahariya robbers ... Chennai ATM robbery mystery!

 

அமீருடன் ஹரியானாவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த போலீசார் அவனை சென்னை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய பிறகு, அண்ணாநகரில் உள்ள பூவிருந்தவல்லி நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சைதாப்பேட்டை சிறையில் அமீர்  அடைக்கப்பட்டான்.

 

இந்நிலையில், நூதன முறையில் ஏ.டி.எம்களில் பணம் திருடியது ஏடிஎம் கொள்ளைக்கே பெயர்போன மேவாட் கொள்ளையர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

தென் மாநிலங்களை அலறவிட்ட பவாரியா கொள்ளைக்காரர்களைத் திரைப்படங்கள் மூலம் அறிந்திருப்போம். அப்படிப்பட்ட பவாரியா கொள்ளையர்களுக்குச் சற்றும் சளைக்காதவர்கள் இந்த மேவாட் கொள்ளையர்கள். ஹரியானா மாநிலத்தில் உள்ள மேவாட் மாவட்டத்தை மையமாக கொண்டு செயல்படும் இவர்கள், மேவாட் கொள்ளையர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.

 

கைது செய்யப்பட்ட அமீரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடவே தனி நெட்வொர்க் இருப்பது தெரியவந்துள்ளது. கொலை, கொள்ளை சம்பவங்களைத் தொடங்கி ஆடு மாடுகளைத் திருடுவதுவரை பல்வேறு செயல்களில் ஈடுபட்டுவருகிறது இந்தக் கும்பல். அதிலும் எவ்வாறு திருடுவது என்பதைக் கற்றுக்கொள்வதற்காக பள்ளி போன்று அமைத்து செயல்படுத்திவருகிறது இந்தக் கும்பல்.

 

மேவாட் கொள்ளையர்கள் இருக்கும் பகுதிக்கு காவல்துறையினர் கூட அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது. மேவாட் கொள்ளையர்கள் சிக்கிக்கொண்டாலும் அவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாட தனியாக வழக்கறிஞர் குழுவும், அவர்கள் செய்த குற்றத்திற்காக சரணடைய ஒரு குழுவும் உள்ளது.

 

சிக்காமல் எப்படி கொள்ளை சம்பவங்களை நிகழ்த்துவது எனத் தேடித் தேடி படித்து தெரிந்துகொள்ளும் இந்தக் கும்பல் அதனை செய்ய பயிற்சி அளிக்கிறது. சென்னையில் நடந்த எஸ்பிஐ கொள்ளையும் இதே பாணியில் அரங்கேற்றப்பட்ட ஒரு சம்பவம்தான். 2013 வாக்கில் ருமேனியாவில் நடத்தப்பட்ட கொள்ளை சம்பவ வழிமுறைகளைக் கற்றுத்தேர்ந்து அதைச் சென்னை சம்பவத்திலும் கையாண்டிருக்கிறது மேவாட் கும்பல்.

 

 

சார்ந்த செய்திகள்