Skip to main content

‘தீபாவளி விடுமுறை’ - மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

Published on 29/10/2024 | Edited on 29/10/2024
Metro train service extension for Diwali holiday 

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (31.10.2024) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ஆம் தேதி அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.  மேலும் அதன் தொடர்ச்சியாக சமயம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (30.10.2024) பிற்பகல் முதல் என அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக நாளை (30.10.2024 - புதன்கிழமை) மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 12 மணிவரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ நாளை அதிகாலையில் முதல் மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும். கடைசி மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 12 மணிக்குப் புறப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 12 மணி வரை பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். நாளை மறுநாள் (31.10.2024- வியாழக்கிழமை) மற்றும் வெள்ளிக்கிழமை (01.11.2024) மெட்ரோ இரயில்கள் விடுமுறை நாள் அட்டவணையின்படி இயங்கும். அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்