திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75,000 ஏக்கர் பரப்பளவு காடுகளில் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்காக 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் குத்தகை 2028 ஆம் ஆண்டில் முடிவடைகிறது. மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்தனர். குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதனையடுத்து, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய நலனுக்காக விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என இதற்கான அறிவிப்பை தனியார் நிறுவனம் நோட்டீஸ் வாயிலாக வெளியிட்டது. மேலும், அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் அந்தத் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்னதாக தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதே சமயம் மாஞ்சோலை மக்களை அங்கிருந்து வற்புறுத்தி வெளியேற்றுவதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக வனத்துறையிடம் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக வனப்பாதுகாவலருக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், “திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலமூக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி கிராமங்களில் உள்ள பாரம்பரிய பழங்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது தொடர்பாக கிருஷ்ணசாமியின் கடிதம் வரப்பட்டுள்ளது. எனவே, இது குறித்த உண்மை நிலை மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை விரைவில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.