திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு காடுகளில் 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் தங்கி அங்கு பணியாற்றி வந்தனர். குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது.
மேலும், அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் அந்தத் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்னதாக தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனையடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தனியார் நிறுவனம் நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், ‘நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மேலும், தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும்வரை யாரையும் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டது.
இதற்கிடையே மாஞ்சோலை கிராம மக்கள் வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன் என்பவர் ஜுலை 7 ஆம் தேதி தேசிய மனித உரிமை ஆணைய புகார் அளித்திருந்தார். இந்நிலையில் புகாரின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.