Skip to main content

எருக்கம்பால் கொடுத்து பெண் சிசுக் கொலை!

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வைர முருகன். இவரது மனைவி சௌமியா. இவர்கள் இருவரும் வீட்டு வாசல் முன்பு பழக்கடை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சௌமியா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த ஜனவரி 21-  ஆம் தேதி செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. 


கடந்த மார்ச் 2- ஆம் தேதி இரவு பெண் குழந்தை இறந்துவிட்டதாக கூறி புதைத்துள்ளனர். இந்த தகவலை உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை. இது அக்கம்பக்கம் வசிப்பவர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்த பொது மக்கள் பெண் குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள்.

MADURAI  INCIDENT POLICE ARRESTED PARENTS

இதனையடுத்து உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா தாசில்தார் செந்தாமரை மற்றும் சக்தி போலீசார் நேற்று (05/03/2020) மாலை வீட்டுக்குச் சென்றனர். வைரமுருகன் வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்துக்கு கீழே குழி தோண்டினர். அப்போது குழந்தை புதைக்கப்பட்டது தெரியவந்தது. குழந்தையைத் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு காவல்துறைக்கு கிடைத்த மருத்துவ அறிக்கையில் எருக்கம்பால் கொடுத்து பெண் சிசுக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 
 

அதைத் தொடர்ந்து வைரமுருகன் மற்றும் அவரது மனைவி சௌமியா ஆகியோரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வறுமையின் காரணமாக பெண் சிசுவை எருக்கம்பால் கொடுத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். அதையடுத்து சிசுவின் பெற்றோர் மற்றும் வைரமுருகனின் தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.