Skip to main content

நீட் தேர்வு துயர முடிவுகளுக்கு மோசடிகளும் ஒரு காரணம்! -அரசிடம் விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

நீட் பயிற்சி மையத்தில் பண மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி  அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  

 

madurai high court about neet plea

 

 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.   

அம்மனுவில், ‘ தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில்  நீட் பயிற்சி வகுப்புகள் நடத்திட தமிழகம் முழுவதும் 412 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் 100 மையங்கள் தொடக்கம் முதல் செயல்பட்டு வருவதால் மீதமுள்ள 312 இடங்களில் நீட் பயிற்சி  மையம் அமைத்திடும் வேலைகள்  நடைபெற்றன.  நீட் பயிற்சி  மையத்திற்கென அரசு சார்பில் ஆசிரியர், கணினி பொருட்கள் என அனைத்து வசதிகளுக்கும் அரசு சார்பில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.   

இந்நிலையில்,  கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நீட் பயிற்சிக்காக கருவிகள் வாங்கியதாகவும், முதுகலைப்பட்டம் பெற்ற 7 ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தி மதிப்பூதியம் வழங்கியதாகவும் போலித்தகவல் தயார் செய்து, அரசிடம் கணக்கு   ஒப்படைத்து தலைமை ஆசிரியர் பண மோசடி செய்துள்ளார். அவ்வாறு, ஆசிரியர்கள் யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை. இதுகுறித்து, தகவல் உரிமை சட்டத்தின் மூலம் விபரங்களைப் பெற்றும்,  பண மோசடி குறித்து மனு அளித்தும்  தலைமை ஆசிரியர் மீது இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.  

இத்தகைய மோசடிகளால்தான்,   வறுமையில் பின்தங்கிய , நல்ல மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்கள் நீட் தேர்வு தோல்வியினால் தவறான முடிவெடுத்து விடுகின்றனர்.  எனவே, பண மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிக் கல்விதுறை இணை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, இவ்வழக்கை நாளை நவம்பர்  5 -ஆம் தேதி ஒத்திவைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்