Skip to main content

களைகட்டிய உள்ளாட்சி தேர்தல்: சேலம் மாவட்டத்தில் 81 சதவீதம் வாக்குப்பதிவு...!

Published on 28/12/2019 | Edited on 28/12/2019

சேலம் மாவட்டத்தில், இன்று நடந்த முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 81.68 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். புதிய வாக்காளர்கள் பெருவாரியாக வாக்குச்சவடிகளை நோக்கி வந்ததால், வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

 

 Local body election-Salem district-81 per cent Polling

 



தமிழகத்தில் கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டுடன் முடிவடைந்தது. அதையடுத்து 2016ம் ஆண்டு இறுதியில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலையொட்டி வேட்புமனுக்கள் பெறப்பட்டு வந்த நிலையில், இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறை செய்யப்படாததை சுட்டிக்காட்டி, தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. அதன்பிறகு மூன்று ஆண்டுகள் பல்வேறு வழக்குகளைக் கடந்து, தற்போது இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது.

 

 Local body election-Salem district-81 per cent Polling

 



முதல்கட்டமாக மாநிலம் மு-ழுவதும் 156 ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று (டிசம்பர் 27) தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக வரும் டிசம்பர் 30ம்  தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் இடைப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

அதாவது, 17 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், 169 ஒன்றியக்குழு உறுப்பினர், 194 ஊராட்சி மன்றத்தலைவர், 1914 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 2294 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவற்றில் ஒன்றியக்குழு உறுப்பினர் 1, ஊராட்சி மன்றத் தலைவர் 3, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் 148 என மொத்தம் 152 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து, எஞ்சியுள்ள 2142 பதவிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. தேர்தல் களத்தில் 8 ஆயிரம் வேட்பாளர்கள் வாக்குப்பதிவைச் சந்தித்தனர். முதல்கட்ட தேர்தலுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 4,84,634 ஆண் வாக்காளர்கள், 4,57,451 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 35 பேர் என மொத்தம் 9,42,120 வாக்காளர்கள் உள்ளனர்.

 

 Local body election-Salem district-81 per cent Polling

 



காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. பெரிய அளவில் பிரச்னைகள் ஏதுமின்றி வாக்குப்பதிவு சுமூகமாகவே நடந்து முடிந்தது. எம்.செட்டிப்பட்டியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் 5 வாக்குச்சாவடிகள் இருந்தன. மாற்றுத்திறனாளி, நடக்க முடியாத முதியோர்களை சக்கர நாற்காலி வண்டிகளில் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குப்பதிவின்போது முன்னுரிமை அளிக்கப்பட்டது. புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் கணிசமாக வாக்குப்பதிவு விகிதம் அதிகமாகியது.

நேற்று நடந்த தேர்தலில், ஆண்கள் 3,96,445 பேரும், பெண்கள் 3,73,032 பேரும் வாக்களித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 13 பேரும் ஓட்டுப்போட்டுள்ளனர். ஆக மொத்தம், சேலம் மாவட்டத்தில் 81.68 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மதியம் 3 மணி நிலவரப்படி, 62 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு நிலவரம், அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மேலும் 20 சதவீதம் அதிகரித்தது. வாக்குச்சாவடிக்கு வராத பெண்கள், முதியவர்களை வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து வந்தனர். அதனால் வாக்குப்பதிவும் கணிசமாக உயர்ந்தது.

சார்ந்த செய்திகள்