Skip to main content

ஓரினக் காதல்; 3 குழந்தைகளின் தாயுடன் வெளியேறிய இளம்பெண் 

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

lgbt issue in salem

 

சேலம் அருகே, தன்பாலின ஈர்ப்பால் 3 குழந்தைகளின் தாயும் இளம்பெண்ணும் இரண்டாவது முறையாக வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இரு பெண்களின் கணவர்களும் காவல்நிலையத்திற்கு நடையாக நடக்கின்றனர்.    

 

சேலம் கொண்டலாம்பட்டி அரசமரத்துக்காட்டூரைச் சேர்ந்தவர் ஷீலா(25). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளிபட்டறை  தொழிலாளியுடன் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. இவர்களுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் மாலா(39). திருமணம் ஆன இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஷீலாவும், மாலாவும்  அருகருகே வசித்து வந்ததால் அவர்கள் நெருங்கிப் பழகி வந்தனர். இதுவே அவர்களுக்குள் ஒரு கட்டத்தில் ஓரினச் சேர்க்கை உறவாக மாறியது. மாலா தன்னுடன் நெருங்கி வராமல் தவிர்த்து வருவதை உணர்ந்த அவருடைய கணவர், மனைவியின் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டுபிடித்தார். ஒரு கட்டத்தில் மாலாவும், ஷீலாவும் ஓரினச் சேர்க்கை உறவாளர்களாக மாறிப்போனதை அறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாலாவின் கணவர், உடனடியாக அங்கிருந்து வீட்டை காலி செய்துவிட்டு தம்மநாயக்கன்பட்டி பகுதிக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.

 

கடந்த ஓராண்டாக அவர்கள் அங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஜூன் 3 ஆம் தேதி, ஷீலா திடீரென்று மாயமானார். அவருடைய கணவர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. அவருடைய அலைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. பல இடங்களில் தேடி அலைந்த பிறகு வீடு திரும்பினார். வீட்டு படுக்கை அறையில் ஷீலா தனது தாலியைக் கழற்றி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டது தெரிய வந்தது. படுக்கை மீது ஒரு கடிதமும் வைத்துவிட்டுச் சென்றிருந்தார். அந்தக் கடிதத்தில், ''எனக்கு கணவருடன் வாழப் பிடிக்கவில்லை. அதனால்தான் அவர் கட்டிய தாலியை கழற்றி வைத்துவிட்டேன். எனக்கு  பிடித்த மாலாவுடன் சேர்ந்து வாழச் செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்,'' என்று குறிப்பிட்டு இருந்தார்.  

 

இதைப் பார்த்து அதிர்ந்து போன கணவன், இதுகுறித்து கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர், ஷீலா மாயமானதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த புகார் பதிவு செய்த சில மணி நேரத்தில் மாலாவின் கணவரும், தன் மனைவியைக் காணவில்லை என கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில் ஷீலாவும், மாலாவும் ஓரினச் சேர்க்கை உறவு காரணமாக ஏற்கனவே ஒருமுறை வீட்டை விட்டுச் சென்றதும், இப்போது இரண்டாவது முறையாக அவர்கள் வீட்டை விட்டுச் சென்றிருப்பதும் தெரிய வந்தது. அப்போது உறவினர்கள் அவர்களை தேடிக் கண்டுபிடித்து அறிவுரை வழங்கியுள்ளனர்.

 

3 குழந்தைகளின் எதிர்காலம் கருதியாவது இந்த உறவை கைவிடுமாறு கூறியுள்ளனர். அதன்பிறகுதான் மாலாவின் குடும்பம் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளது. இந்த நிலையில்தான் மீண்டும் வீட்டை விட்டுச் சென்ற மாலாவையும் ஷீலாவையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

(இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் பெயர்கள் கற்பனையானவை). 

 

 

சார்ந்த செய்திகள்