Skip to main content

குவைத் தீ விபத்து; முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Kuwait fire; Chief Minister M.K. Stalin's funding announcement

குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று முன்தினம் (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த கட்டடத்திலிருந்த 195 பேரில் 175 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று முன்தினம் (12.06.2024) தீ விபத்து ஏற்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எபமேசன் ராஜு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் இராமு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷெரிப் ஆகிய தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்து வருகிறேன். 

Kuwait fire; Chief Minister M.K. Stalin's funding announcement

உயிரிழந்தவர்களின் உடல்களைத் தமிழ்நாட்டிற்கு உடனடியாகக் கொண்டு வருவதற்குக் குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அயலகத் தமிழர் நலத்துறைக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளேன். அதன் பயனாக, உயிரிழந்த ஏழு தமிழர்களின் உடல்களும், தனிவிமானத்தின் மூலம் இந்தியாவிற்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவை வந்தடையும், தமிழர்களின் உடல்களை உடனடியாகத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும், தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இது மட்டுமல்லாமல், இந்தக் கொடிய தீவிபத்தில் காயமடைந்து, குவைத் நாட்டிலேயே, சிகிச்சை பெற்று வரும் நம் தமிழ்ச்சொந்தங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டிடுமாறு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு நான் அறிவுரை வழங்கியதையொட்டி, உரிய நடவடிக்கைகளை அத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடையத் தேவையான உதவிகளை குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து அயலகத் தமிழர் நலத்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

Kuwait fire; Chief Minister M.K. Stalin's funding announcement

குவைத் நாட்டில் பணிபுரிந்து வரும் தமிழர்கள், அங்கு கொடிய தீவிபத்திற்கு ஆளானதுடன், உயிர்களை இழந்தும், தீக்காயங்களுக்குச் சிகிச்சைகள் பெற்றும் வரும் நிலையை எண்ணி, வேதனையில் ஆழ்ந்துள்ள என் அருமை தமிழ்நாட்டு உறவினர்களுக்கு, தமிழ்நாடு அரசு எல்லா உதவிகளையும் வழங்கிடத் தயாராக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழர் நலத்துறையின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதன்படி இந்தியாவிற்குள் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண். +91 1800 309 3793; அதே போன்று குவைத் நாட்டில் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண் +91 80 6900 9900, +91 80 6900 9901. இந்த இரண்டு எண்கள் வாயிலாகவும், அயலகத் தமிழர் நலத்துறையைத் தொடர்பு கொண்டு தேவைப்படும் தகவல்களைப் பெற்றிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் கொச்சி கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னையில் இருந்து கொச்சி விரைந்துள்ளார். கொச்சியில் இருந்து உடல்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து இந்த தகவலைத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘நீங்கள் நலமா’ - பயனாளிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்த முதல்வர்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Are you okay the Chief Minister asked the opinions of the beneficiaries

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறியும் முதல்வரின் முகவரி துறையின் நீங்கள் நலமா என்ற திட்டத்தில் பயனாளிகளை நேரடியாக வீடியோ கால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் மக்களை கல்வி. சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் உயர்வடைய செய்து அவர்களை சமூக நீரோட்டத்திற்குள் கொண்டுவருவதன் மூலம் தமிழ்நாடு சமத்துவ சமுதாயமாக திகழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ்
செயல்படும் தமிழ்நாடு அரசு அனைத்து தரப்பு பொதுமக்களும் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது. மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்குடன், மக்களுக்கும் அரசிற்கும் இடைவெளியைக் குறைத்திடும் வகையில் மக்களின் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெற ‘நீங்கள் நலமா’ என்ற புதியதொரு திட்டம் கடந்த 06.03.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. 

Are you okay the Chief Minister asked the opinions of the beneficiaries

இத்திட்டம் முதல்வரின் முகவரித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், அரசுத் துறைகளின் செயல்பாட்டில் உள்ள முக்கியமான நலத் திட்டங்கள் மற்றும் அரசு துறைகளால் வழங்கப்படும் சேவைகள் மூலம் பயன்பெற்ற பயனாளிகளிடமிருந்து கருத்துகள் மற்றும் பின்னூட்டம் பெறப்படுகிறது. அதனடிப்படையில், நலத்திட்டங்களின் பயன்கள் மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அரசு வழங்கிடும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்த வழிவகைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நீங்கள் நலமா வலைத்தளத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்த விவரத் தொகுப்பு பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, இன்று (04.07.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து பல்வேறு பயனாளிகளை வீடியோகால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த அவர்களது பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஹத்ராஸ் துயரம்; தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Hathras incident Tamil Nadu CM MK Stalin obituary

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் இன்று (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்துள்ளனர். இந்த சிக்கி குழந்தைகள், பெண்கள் என 122 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். 

Hathras incident Tamil Nadu CM MK Stalin obituary

அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சார்பில் ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான நெரிசலில் விலைமதிப்பற்ற உயிர்களின் சோகமான இழப்புகளால் ஆழ்ந்த வேதனையில் ஆழ்ந்துள்ளேன். இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Hathras incident Tamil Nadu CM MK Stalin obituary

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் துயரம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Hathras incident Tamil Nadu CM MK Stalin obituary

மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஆன்மீக சத்சங்க நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலம் பெறவும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.