Skip to main content

உ.பி vs தமிழ்நாடு; ஆளுநர் ரவியை விமர்சித்த கே.எஸ். அழகிரி 

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

ks alagiri talk about governor rn ravi and bjp

 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி குறித்த புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, “நாம் சமூக நீதி பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால் நடப்பது அதற்கு நேர்மாறாக இருக்கிறது. மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் இயற்கை உபாதைகள் கழிப்பது உள்ளிட்ட செயல்கள் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்றுதான் வருகின்றது” என்றார்.

 

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்து குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “பாஜக மிகப் பெரிய சதி செய்கிறார்கள். அரசியல் கருத்துகளை பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா, அண்ணாமலை ஆகியோர் சொல்லட்டும். அதற்கு நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். ஆனால் ஒரு ஆளுநர் எப்படி அரசியல் கருத்துகளை சொல்வது. நீங்கள் உங்கள் மரபுகளைத் தாண்டி பேசுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

 

இந்தியா முழுவதும் தீண்டாமை இருக்கிறது. ஆனால் தீண்டாமைக்கு எதிராக நாம் எடுத்த நடவடிக்கைகள்தான் முக்கியம். நாம் தீண்டாமையை எதிர்த்து நிறைய போராட்டங்களையும், தியாகங்களையும் செய்திருக்கிறோம். தமிழகத்தில் இதுவரை முற்போக்கு கட்சிகள் தீண்டாமையை ஆதரித்தது கிடையாது. அங்கொன்றும், இங்கொன்றும் தீண்டாமை குற்றங்கள் நடைபெறுகிறது. அதனை நான் மறுக்கவில்லை. ஆனால் தீண்டாமையை இந்த அரசு எதிர்க்கிறது. ஆனால் தீண்டாமையில் உத்தரப் பிரதேசம் மற்றும் பாஜக ஆளும் பிற மாநிலங்கள் எப்படி இருக்கிறது; தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.  தமிழகத்தின் முதல் முதலமைச்சர் முதல் இன்று இருக்கும் முதலமைச்சர் வரை தீண்டாமைக்கு எதிராக இரும்புக் கரம்கொண்டு செயல்பட்டிருக்கிறோம்.

 

தீண்டாமையை பற்றி பேச நீங்கள் யாரு... நீங்கள்தான் சனாதனம் என்ற பெயரில் தீண்டாமையை உருவாக்கினீர்கள். உங்களால் இந்து மதத்தின் தலைவராக ஒரு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை நியமிக்க முடியுமா? சங்கராச்சாரியாருக்கு பதிலாக ஒரு பட்டியலினத்தவரை அந்த இடத்தில் அமர வைக்க முடியுமா? ஆர்.எஸ்.எஸ் அதை ஏற்றுக் கொள்ளுமா? ஆனால் காங்கிரஸ் செய்திருக்கிறது. பெரியார் செய்திருக்கிறார். பொதுவுடைமை கட்சிகள் செய்திருக்கிறது. அதற்கு பெயர்தான் சீர்திருத்தம், சமூக நீதி” என்று பேசியிருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்