Skip to main content

ரகோத்தமன் மறைவுக்கு கே.எஸ். அழகிரி இரங்கல்!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

hk

 

சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன், கரோனா தொற்று காரணமாக சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று (12.05.2021) காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 72. இவர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான விசாரணை அதிகாரி குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அவரின் மறைவையொட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "மத்திய புலனாய்வுத் துறையில் (சிபிஐ) 36 ஆண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்போடு பணியாற்றிய கே. ரகோத்தமன் கரோனா தொற்று காரணமாக காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை விசாரிக்க, மத்திய புலனாய்வுத் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமை விசாரணை அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டார். அப்பணியில் 10 ஆண்டுகாலம் கடுமையாக உழைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் முக்கியக் காரணமாக இருந்தவர். 

 

இதனால், அவரது உடல்நலம் கூட பெரிதும் பாதிக்கப்பட்டது. மத்திய புலனாய்வுத் துறையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, நிறையப் புத்தகங்களை எழுதி வெளியிட்டார். அதில், மகாத்மா, இந்திரா, ராஜீவ் படுகொலையைப் பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இதன் மூலம் அந்தப் படுகொலைகள் நிகழ்த்துவதற்குப் பின்னாலே இருந்த சதித் திட்டத்தைத் தெளிவாக எடுத்துக் கூறியவர். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று துணிவுடன் கருத்துகளைக் கூறியவர். இதன்மூலம் உண்மைகளை வெளிப்படைத் தன்மையோடு வழங்கியவர். ரகோத்தமன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்