Skip to main content

வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் கைது; அதிர்ச்சியில் வருவாய்த் துறையினர் 

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

krishnagiri hosur private nursery school noc letter issue 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - பாகலூர் சாலையில் தனியார் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை மஞ்சுளா என்பவரிடம் இருந்து அரவிந்த் என்பவர் வாங்கியுள்ளார். பள்ளியைத் தொடர்ந்து நடத்த தீயணைப்புத்துறை, போக்குவரத்து, வருவாய் உள்ளிட்ட துறைகளிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம். இதையடுத்து, தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) வழங்கக்கோரி அரவிந்த், மாவட்ட வருவாய்த்துறைக்கு விண்ணப்பித்து இருந்தார்.

 

அதன்பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் வட்டாட்சியர் கவாஸ்கர், சம்பந்தப்பட்ட மழலையர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பள்ளியில் சில குறைகள் இருப்பதாகவும் அவற்றை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். தனக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்ட அரவிந்த், தொகை அதிகமாக இருப்பதாகப் பேரம் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் 42 ஆயிரம் ரூபாய்க்கு வட்டாட்சியர் கவாஸ்கர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அரவிந்த், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அரவிந்த்திடம் 42 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் ரசாயன பவுடர் தடவி அவரிடம் கொடுத்து அனுப்பினர்.

 

அந்த பணத்துடன் சென்ற அரவிந்த், கடந்த 14 ஆம் தேதி வட்டாட்சியர் கவாஸ்கர், துணை வட்டாட்சியர் மங்கையர்க்கரசி ஆகியோரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். லஞ்ச வழக்கில் வட்டாட்சியரும், பெண் துணை வட்டாட்சியரும் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் மாவட்ட வருவாய்த்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Rage for daughter refusing to give up love and incident happened in krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காமாட்சி (33) என்ற மனைவியும், ஸ்பூர்த்தி எனும் 16 வயதில் மகளும் இருந்தார்கள். ஸ்பூர்த்தி, பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டை வெளியே சென்று ஸ்பூர்த்தி, இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் ஸ்பூர்த்தி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (16-03-24) இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தது ஸ்பூர்த்தி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஸ்பூர்த்தி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி ஆகியோர், மாணவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், மாணவியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் ஏரியில் வீசியுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி (36) ஆகிய 3 பேரையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால், பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.