Skip to main content

லஞ்சம் வாங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட அலுவலர் கைது!

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
K

 

கிருஷ்ணகிரியில் கடை ஒதுக்கீடு செய்வதற்காக ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட திட்ட அலுவலர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.


கிருஷ்ணகிரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் நரசிம்மன் (49). இவர், அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார். கிருஷ்ணகிரி டி.பி. சாலையில் வெல்லம் மண்டி நடத்தி வருபவர் ஜெயக்குமார்.   இவர், அங்குள்ள நூலகம் எதிரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடத்தில் தனக்கும் வாடகைக்கு ஒரு கடை ஒதுக்கித் தருமாறு விண்ணப்பித்து இருந்தார். கடை ஒதுக்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சமாக திட்ட அலுவலருக்குக் கொடுக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கிளர்க் சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

 

நரசிம்மன்

nadarajan


அவரிடம் பணம் கொடுக்க சம்மதம் என அப்போது ஜெயக்குமார் ஒப்புக்கொண்டாலும், லஞ்சம் கொடுத்து கடையை வாடகைக்கு எடுக்க அவர் விரும்பவில்லை. இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.   அதன்படி போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயக்குமாரிடம் கொடுத்து, அந்தப்பணத்தை கிளர்க்கிடம் கொடுக்குமாறு திட்டம் வகுத்துக் கொடுத்தனர். 


இதையடுத்து, ஜெயக்குமார் இன்று மாலை (செப்டம்பர் 7, 2018) மணியளவில் பணத்துடன் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்குச் சென்றார்.¢ அங்கு கிளர்க் சத்தியமூர்த்தியிடம் பணத்தைக் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர் திட்ட அலுவலரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் கையும் களவுமாகப் பிடித்து நரசிம்மனை கைது செய்தனர். உடந்தையாக இருந்த கிளர்க் சத்தியமூர்த்தியையும் கைது செய்தனர்.   தொடர்ந்து இரவு 10 மணியைக் கடந்தும் அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்