Skip to main content

கடத்தப்பட்ட கொ.ம.தே.க நிர்வாகி கொடூர கொலை; முட்புதருக்குள் சடலத்தை வீசி சென்ற ஊழியர்

Published on 26/08/2022 | Edited on 26/08/2022

 

KMDK member passed away

 

வெப்படை அருகே கடத்திச் செல்லப்பட்ட கொ.ம.தே.க. இளைஞரணி அமைப்பாளரை, அவரிடம் வேலை செய்து வந்த ஊழியரே கூட்டாளிகளுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்து, சடலத்தை முட்புதருக்குள் வீசிச்சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

 

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள பாதரை கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம் (35). இவருடைய மனைவி திவ்யா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை. கவுதம், வெப்படையில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அத்துடன், ஈ.ஆர்.ஈஸ்வரன் நடத்தி வரும் கொ.ம.தே.க. கட்சியில் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராகவும் இருந்து வந்தார்.

 

ஆக. 21ம் தேதி இரவு, வழக்கம்போல் பணிகளை முடித்துவிட்டு, நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாதரை மாரியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரை ஒரு கும்பல் வழிமறித்து, காரில் கடத்திச் சென்றது. இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் கவுதம், தன் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு, வீட்டில் உள்ள நகை, பணத்தை எடுத்து ஒரு பையில் போட்டு வைக்கும்படியும், தான் அனுப்பி வைக்கும் நபரிடம் அந்தப் பையை கொடுத்து அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார். 

 

இதையடுத்து கவுதமிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அவர் சொன்னதாக எந்த நபரும் கவுதம் வீட்டுக்கும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி திவ்யா மீண்டும் கணவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாகியும் கவுதம் வீட்டுக்கும் வராததால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். 

 

இந்நிலையில், சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வடுகப்பட்டி மேட்டுக்காடு ஏரிக்கரையில் உள்ள முட்புதருக்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக, ஆக. 24ம் தேதி இரவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் மறுநாள் அங்கு சென்று பார்த்தபோது, அவர்தான் கடத்தப்பட்ட கவுதம் என்பது தெரிய வந்தது. கவுதமின் உடலில் ஏராளமான கத்திக்குத்து காயங்கள் இருந்தன. தலையிலும் ஆழமான வெட்டுக்காயம் இருந்தது. மர்ம நபர்கள் அவரை கடத்திச்சென்று கொலை செய்து, ஏரிக்கரை முள்புதருக்குள் வீசிவிட்டுச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


காவல்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில், கவுதம் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் வெப்படையைச் சேர்ந்த தீபன் என்பவர் வேலை செய்து வந்தார். அவர் கவுதமுக்குத் தெரியாமல், நிதி நிறுவனத்தில் 15 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ளார். இதைக் கண்டுபிடித்துவிட்ட கவுதம், கையாடல் செய்த பணத்தை உடனடியாக திருப்பி ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார். ஒருகட்டத்தில், மோசடி செய்து விட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளார். 


இதனால் ஆத்திரம் அடைந்த தீபன், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கவுதமை கடத்திச்சென்று கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள தீபனை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
 

காவல்துறையினர் எப்படியும் தன்னை பிடித்து விடுவார்கள் என்று அச்சம் அடைந்த தீபன், கவுதமை கொன்று சடலத்தை வீசியெறிந்த இடம் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ்ஆப் மூலம் குரல் பதிவாக தகவல் அனுப்பியதாகவும், அதன்பிறகுதான் கவுதமின் சடலம் இருக்கும் இடமே காவல்துறைக்கு தெரிய வந்ததாகவும் சொல்லப்படுகிறது.


இது ஒருபுறம் இருக்க, கொ.ம.தே.க இளைஞரணி அமைப்பாளர் சூரியமூர்த்தி மற்றும் அவருடைய உறவினர்கள், கவுதமை கொன்ற கொலையாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை வாங்கிச் செல்ல மாட்டோம் என்றனர். இதையடுத்து, இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்