Skip to main content

மிரட்டும் ராஜா பகவத்; நடுங்கும் இளம்பெண் - சென்னையில் பரபரப்பு

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

KGF Vignesh threatening woman

 

சென்னை, வண்ணாரப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா பகவத் விக்னேஷ் எனப்படும் விக்கி. இவர், வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் என்என் கார்டன் பகுதியில் கேஜிஎஃப் எனும் துணிக்கடையை நடத்தி வருகிறார். இவர், சமூக வலைதளங்கள் மூலமாகவும், யூடியூப் மூலமாகவும் ஏற்கனவே பிரபலமானவர். அதன் மூலம் இவர், நடத்தி வரும் கேஜிஎஃப் என்ற துணிக்கடையும் மிகவும் பிரபலமானது. அதற்கு காரணம் கடந்த சில ஆண்டுகளாக யூடியூப் சேனல்களுக்கு இவர் கொடுக்கும் பேட்டிகள்தான். இவ்வாறு துணிக்கடை வியாபாரம் மற்றும் யூடியூப் சேனல்கள் மூலம் பிரபலமான விக்கியின் மீது ஏற்கனவே சில சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், விக்கியின் கேஜிஎஃப் துணிக்கடை எப்போதுமே பிசியாகவும் கூட்டமாகவும் இருந்துகொண்டுதான் இருக்கும். 

 

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள் எடுப்பதற்கு தி.நகர் போன்ற பகுதிக்கு செல்பவர்களைப் போன்று வண்ணாரப்பேட்டை கேஜிஎஃப் - க்கும் சிலர் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு இவர், கஸ்டமர்களையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில், தீபாவளி பண்டிகை என்பதால் சென்னையில் உள்ள ஏராளமான துணிக்கடைகளில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அதே சமயம், இதுபோன்ற தினங்களில் இந்தக் கடைகளுக்கு சிறார்களை அழைத்து வந்து வேலை வாங்குவது வழக்கம். இந்நிலையில், குழந்தைகள் நல ஆணையத்தின் அதிகாரிகள் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி ரோடு மற்றும் ஜீ.ஏ ரோடு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். 

 

இந்தப் பகுதியில் ஏறத்தாழ சுமார் ஆயிரம் கடைகள் செயல்பட்டு வந்துள்ளன. இதில் சில கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்தத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிரமாக ரெய்டு மேற்கொண்டுள்ளனர். ரெய்டின் தொடர்ச்சியாக விக்னேஷ் நடத்தி வந்த கேஜிஎஃப் துணிக்கடைக்கும் அதிகாரிகள் ரெய்டு சென்றுள்ளனர். அப்போது, அந்தத் துணிக்கடையில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இருப்பது அதிகாரிகளுக்குத் தெரிந்துள்ளது. இதையடுத்து, அவர்களை அழைத்து உங்களின் வயது என்னப்பா.. என அதிகாரிகள் கேட்கும் போது அனைவரும் 18 வயதிற்கும் மேலே உள்ளவர்கள் என கூறியுள்ளனர். ஆனாலும் பார்ப்பதற்கு சிறுவர்கள் போலவே இருந்ததால், அவர்களை ராயபுரத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர். 

 

அப்போது, அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அதில் மூன்று சிறுவர்கள் 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், மற்றவர்களை அனுப்பி வைத்த அதிகாரிகள், 3 சிறுவர்களை மட்டும் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சிறுவர்கள் அவர்களின் விருப்பதில் வேலைக்கு வந்தார்களா? அல்லது யாராவது கட்டாயப்படுத்தி அவர்களை அழைத்து வந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் ஜவுளிக்கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிகிறது.

 

இது ஒரு புறமிருக்க, இது தொடர்பாக செய்தியாளரை சந்தித்த இசுலாமிய பெண் ஒருவர், கேஜிஎஃப் விக்கி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தைகள் நல வாரியத்தில் இருந்து அதிகாரிகள் வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சோதனை நடத்தியதாகவும், இது எப்போதும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் நடப்பது வழக்கம்தான் எனவும், இப்போது நடந்த சோதனையில் கேஜிஎஃப் துணிக்கடையில் மூன்று சிறார்கள் இருந்ததை உறுதி செய்து அவர்களை பிடித்து சென்று விட்டதாகவும், இவ்வாறு அந்தக் கடையில் சோதனை நடத்தியதற்கு இந்தப் பகுதியில் துணிக்கடை நடத்தி வரும் தாங்கள்தான் காரணம் என்று அவர் நினைத்துக்கொண்டு தங்களை மிரட்டி வருகிறார் என கூறியுள்ளார். 

 

மேலும், இந்தப் பகுதியில் அவர் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார் என்றும், இந்தப் பகுதியில் உள்ள அனைவரையும் அடக்கி ஆள முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல், கேஜிஎஃப் கடை விக்கி மட்டுமல்லாமல், அவரின் அப்பா, அம்மா என குடும்பமே மிரட்டல் விடுக்கின்றனர் என்றும் கூறுகிறார். மேலும், இவர், சமூக வலைதளங்களில் எல்லாம் தனது கடையில் வேலை செய்யும் இளைஞர்களுக்கு நல்ல பழக்கங்களை ஏற்படுத்துவதாக கூறுவது எல்லாம் சுத்த பொய் என்றும், இவரது கடையில் வேலை செய்யும் சிறார்கள் அதிகம் தவறான பாதைக்குச் செல்கின்றனர் என்றும் கூறுகிறார். 

 

அதுமட்டுமல்லாமல், ஒரு முறை இந்தக் கடையில் இருக்கும் ஒரு சிறுவன் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும், அந்தச் சிறுவனை தூண்டி விடுவது விக்கிதான் எனவும் வேதனையோடு தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கேஜிஎஃப் கடையின் விக்கி பிஜேபி கட்சியில் இருப்பதால், அதன் அரசியல் செல்வாக்கை வைத்துக்கொண்டு இப்படி செய்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.  தன்னிடம் பணம் ஏராளமாக இருப்பதால் அதை வைத்து நான் எதையும் செய்வேன் எனவும், போலீசார் தான் சொல்வதைத்தான் கேட்பார்கள் எனவும் விக்கி கூறியதாக அந்தப் பெண் கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசியதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது எனவும் கூறியிருக்கிறார். 

 

தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த அந்தப் பெண், இது தொடர்பாக போலீசாரிடம் சென்று முறையிட்டாலும் யாருமே இதனைத் தட்டிக்கேட்க மறுக்கின்றனர் எனவும் வேதனையோடு தெரிவித்துள்ளார். மேலும், இவர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனக்கூறும் அவர், ஆகையால் தங்களுக்கு கேஜிஎஃப் விக்கியிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, இது போன்ற சர்ச்சைகளில் சிக்குவது கேஜிஎஃப் விக்கிக்கு இது புதிதல்ல எனவும், ஏற்கனவே அதே பகுதியில் வியாபார போட்டியில் அவரின் நண்பருக்கும் அவருக்கும் பெரிய அளவில் மோதல் உருவாகி பெரும் சர்ச்சை உருவாகியது எனவும், அதன் பின்னர், தலையில் உள்ளாடையை அணிந்துகொண்டு ஒரு ஜட்டி ஒரு ரூபாய் என இவர் கேலி செய்யும் வீடியோ ஒன்றும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது எனவும் கூறுகின்றனர். தீபாவளி சமயத்தில் சர்ச்சையை உண்டு செய்திருக்கும் இந்தச் சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- அருள்

 

சார்ந்த செய்திகள்