மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இலக்கியவாதியும், மூத்த பத்திரிகையாளருமான ஆரூர் தமிழ்நாடன், முதல்வருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில் தமிழ் இலக்கிய வரலாற்றில், இன உணர்வு, மொழி உணர்வு மிக்க திராவிட இலக்கியவாதிகளும் படைப்பாளிகளும் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருவதால், தமிழக அரசு புதிதாக இலக்கிய வரலாற்றைத் தொகுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் எழுதிய அந்தக் கடிதம் கீழே....
"தமிழ்நாட்டின் முதல்வர் ’செயல் புயல்’ மு.க.ஸ்டாலினுக்கு, வணக்கம். தமிழ்நாட்டு மக்களில் ஒருவனாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தங்கள் தலைமையிலான தி.மு.க. அரசு, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த வேகத்திலேயே, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னை முழுதாக இணைத்துக் கொண்டு, அயராது உழைத்து வருவதை நாடே பார்த்து மகிழ்ந்து வருகிறது. இதற்கிடையே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் அசுர வேகத்தைக் காட்டி அனைத்துத் தரப்பு மக்களையும் நம்பிக்கையுறச் செய்திருக்கிறது தி.மு.க. அரசு.
மேலும் தமிழ் மொழி வளர்ச்சி குறித்தும் அக்கறை கொண்டு, புதிய இலக்கிய விருதுகள், விருது பெற்ற இலக்கியவாதிகளுக்கு இல்லங்கள் என்றெல்லாம் மதிப்புமிகுந்த திட்டங்களையும் உங்கள் தலைமையிலான அரசு அறிவித்திருப்பது ஒட்டுமொத்த தமிழுலகத்தையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகிறது. அதற்கான நன்றியையும் வாழ்த்துக்களையும் உள்ளார்ந்த உணர்வோடு தமிழ் மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அரசின் இந்த விருது மற்றும் இல்லம் தொடர்பான அறிவிப்பு குறித்து, பலரும் பலவித கருத்துக்களை முன்வைத்துவரும் நிலையில், என் பார்வையில் சில கருத்துக்களை தங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தமிழ் இன உணர்வுக்கு எதிரான செயல்களுக்குப் பெரிதும் இங்கே இடமளிக்கப்பட்டது. அதிலும் ஜெ’வின் மறைவிற்குப் பிறகு, டெல்லியின் தமிழ்பண்பாட்டுக்கு எதிரான படையெடுப்புகளுக்குத் தொடர்ந்து ஆரத்தி எடுக்கப்பட்டன. அதன் மறைமுக இந்தித் திணிப்பு முயற்சிக்கும்,புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நேரடியாகவே சமஸ்கிருதம் மற்றும் இந்தித் திணிப்பு நடவடிக்கைக்கும் அனுசரணையாகவே அ.தி.மு.க. அரசு கடைசி வரை இருந்து வந்தது. கடந்த அரசில், தமிழ்வளர்சித்துறையே, இந்தி வகுப்பை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.
அதேபோல், தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட இலக்கிய விருதுகளும் அவர்களால் கேலிக் கூத்தாக்கப்பட்டன. இவற்றில் ஊழலும், முறைகேடுகளும் குறுக்கிட்டு, விருதுகளின் பெருமையைச் சீர் குலைத்தன. இப்படிப்பட்ட இந்த இழிந்த நிலை, தி.மு.க. ஆட்சியில் முழுதும் மாறும் என்ற நம்பிக்கை வெளிச்சம் எல்லோர் மனத்திலும் இப்போது சுடர்விடத் தொடங்கியிருக்கிறது.
தற்போது அரசு அறிவித்திருக்கும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள் தெளிவாக வரையறுக்கப்படுவதோடு, அரசின் விருதுகள் தகுதி படைத்தவர்களுக்கே கிடைத்தால்தான் அதன் நோக்கம் முழுமை அடைந்ததாக ஆகும். எனவே, தி.மு.க. அரசு, இத்தகைய இலக்கிய விருதுக்கான விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில், தமிழுணர்வும், இன உணர்வும், சமூக அக்கறையும் கொண்ட அறிஞர்கள் இடம்பெறுவார்கள் என்பதை அறிவோம். இதன் மூலம் உரிய விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதால், தமிழ்ச்சமூகம் நிம்மதியடைந்திருக்கிறது.
விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவோர் என்ன எழுதியிருக்கிறார்கள்? எதை எழுதியிருக்கிறார்கள்? எப்படிப்பட்ட எண்ணங்களை விதைக்கும் நோக்கத்தோடு எழுதியிருக்கிறார்கள்? அவர்களது படைப்புகள் எத்தகைய பயன்களை உருவாக்கும் என்பதை எல்லாம் கூர்ந்து கவனித்து, அவர்களை உயர்வுசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
ஆபாசக் குப்பைகளையும், விரக்தி எழுத்துக்களையும், பண்பாட்டு விரோதப் படைப்புகளையும் எழுதிக் குவிப்போர் யார் யார் என்பதை இனம் காண்பதோடு, தமிழுணர்வு மற்றும் திராவிடச் சிந்தனை கொண்ட படைப்பாளிகளும் இலக்கியவாதிகளும் கொண்டாடப்பட வேண்டும். அவர்களின் நூல்கள் நூலகங்களில் பெருமளவில் இடம் பெற வேண்டும் என்பதும் பெரும்பாலானோரின் எண்ணமாகும்.
இங்குள்ள சில இலக்கிய அமைப்பினரும், நவீன இலக்கியவாதிகள் என்ற பெயரில் இயங்கிவரும் நபர்களும், தமிழால் பிழைத்த போதும் தமிழுக்கு இரண்டகம் செய்பவர்களாகவே, மொழி இன உணர்வை ஏகடியம் செய்பவர்களாகவே இருந்து வருகிறார்கள். சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கூட ’பரப்புரை முழக்கம்’ என்பதாகக் காட்டி, அது ஏதோ மலினமான செயல் என்றும் நிலை நாட்டமுயல்கின்றனர். மறுமலர்ச்சிக்கு வித்திட்ட திராவிட இயக்கப் படைப்பாளர்களை,அவர்கள் தீண்டத் தகாதவர்களாகவே எண்ணி வருகின்றனர்.
அதனால்தான், இதுவரை எழுதப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் திராவிட இயக்கப் படைப்பாளர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றனர். தமிழ் இலக்கியத்தை, மக்கள் இலக்கியமாகவும் மறுமலர்ச்சி இலக்கியமாகவும் மாற்றியதோடு, தமிழர்களுக்கு இன உணர்வையும் மொழி உணர்வையும் ஊட்டியவர்கள் திராவிட இயக்கப் படைப்பாளர்களே. அந்த வரிசையில் போற்றத் தகுந்தவர்களான அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி பொன்னிவளவன், குடியரசு வரை, வேழவேந்தன் வரை, எவரையும் ஏற்காமல் இங்கொரு இலக்கியப் பிறழ்வை அரங்கேற்றி வருகின்றனர். அதேபோல் தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார், சரவணத்தமிழனார் உள்ளிட்டோரும் மறக்கடிக்கப்பட்டு வருகிறார்கள். நல்ல தமிழில் எழுதிய திரு.வி.க., மு.வ., உள்ளிட்டோருக்கும் இலக்கிய வரலாற்றில் போதிய பங்களிப்பு தரப்படவில்லை.
இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள், பாரதிதாசனைத் தவிர பெரும்பாலான திராவிட இலக்கியப் படைப்பாளர்களை ஒரு பொருட்டாக எண்ணியதாகவே தெரியவில்லை. எனவே, தமிழ் இலக்கிய வரலாற்றை தமிழக அரசே, ஒரு புலவர் குழுவை அமைத்து உருவாக்கவேண்டும். பாடத் திட்டங்களிலும் இதையொட்டிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் தலைமையிலான தி.மு.க. அரசு, இப்போதுதான் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறது. அது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும், இலக்கிய வரலாற்றுக்கும் உரிய பங்களிப்பைச் செய்ய, அதன் கையில் முதல் தவணையாக, தமிழக மக்களால் ஐந்து ஆண்டுகள் தரப்பட்டுள்ளன. எனவே இனி நல்லவையே நிகழும். அனைத்துத் துறைகளும் சுடரும் என்பதால், தமிழ்நாட்டு மக்களில் ஒருவனாக அரசை இதயம் மகிழ வாழ்த்துகிறேன்." இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.