Skip to main content

நிற்காத அரசுப் பேருந்து; சிறை பிடித்த மக்கள்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

Karur K.Paramathi bus issue

 

கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது க.பரமத்தி பேருந்து நிலையம். இந்தப் பேருந்து நிலையத்தைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும், கரூர் மற்றும் கோவைக்குச் சென்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் அந்த க.பரமத்தி பேருந்து நிலையத்தையே நம்பியுள்ளனர். 

 

இந்தப் பேருந்து நிலையத்தில் பகல் நேரமும், இரவு நேரமும் அரசுப் பேருந்துகள் முறையாக நின்று செல்வதில்லை எனப் பொதுமக்கள் வெகுகாலமாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதனால், குறிப்பிட்ட நேரத்திற்குப் பள்ளி, கல்லூரி, அலுவலகம் மற்றும் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். 

 

இந்நிலையில், இன்றும் அதே போல், கரூர் பேருந்து நிலையத்திலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்லவே, அப்பேருந்தைக் க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்கள் சிறை பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சம்பவம் குறித்து அறிந்த க.பரமத்தி காவல்துறையினர், அந்த இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சு வார்த்தையில், இனி இதுபோல் நடைபெறாது. பேருந்துகள் அனைத்தும் முறையாக நின்று செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதி சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்